விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: தேஜ்பால் அறிக்கை

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: தேஜ்பால் அறிக்கை
Updated on
1 min read

தன் மீதான புகாரில் போலீஸ் மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெஹல்காவின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் தருண் தேஜ்பால் அறிவித்துள்ளார். அவர் மீது கோவா போலீசார் பலாத்கார வழக்கில் குற்றத்தை பதிவு செய்து விசாரணையை துவக்கி விட்டனர்.

இது குறித்து, கடந்த இருநாட்களாக மௌனம் சாதித்து வந்த தருண் தேஜ்பால் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, "இந்த சம்பவத்தில் நடந்த அனைத்து உண்மைகளையும் போலீசார் மற்றும் விசாரணை குழு முழுமையாக விசாரிக்க வேண்டும். நடந்த சம்பவத்தின் துல்லியமான முழு உண்மைகளும் தெரிய, கைப்பற்றப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவின் முழு பதிவுகளையும் போலீசார் வெளியிட வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்த அறிக்கையும், மிக அதிகமான ஆங்கில புலமையில், கவனத்துடன் எழுதப்பட்டுள்ளது. அதில் தவறு நிகழ்ந்ததாக கூறியுள்ளாரே தவிர, எந்த இடத்திலும் அது என்ன தவறு என்பதை தேஜ்பால் குறிப்பிடவில்லை. கடந்த நான்கு நாட்களாக புகாரை பெற்ற நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்திரி கூறியதன்படி நடந்ததாகவும் தெரிவித்த தேஜ்பால், இதற்காக அவர் ஷோமாவின் மூலமாக செவ்வாய்க்கிழமை மன்னிப்பு கேட்டதாகவும், புதன்கிழமை ஆசிரியர் பதவியில் இருந்து விலகியதாகவும், வியாழக்கிழமை இதுபற்றிய விசாரணக் குழு அமைக்கப்பட்டதை கேள்விப்பட்டதாகவும் விவரித்து ள்ளார்.

இந்நிலையில், டெல்லியிலுள்ள தேஜ்பால் வீட்டு முன் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர் மீதான புகாருக்கு பின் அகில பாரத வித்யா பரிஷத் அமைப்பு தெஹல்கா அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளதால் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதே டெல்லி போலீசாரின் உதவியுடன் தான் தேஜ்பாலை கைது செய்யலாம் என கோவா போலீசார் தலைநகர் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

தன்னுடன் பணியாற்றிய பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக, தெஹல்கா இதழ் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர், சமுக நல பெண் அமைப்புகளை அணுகிய பிறகு புதன்கிழமை இந்த விவரம் தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in