

காஷ்மீர் மாநிலம் த்ரால் மற்றும் ராம்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் புர்ஹான் வானிக்கு அடுத்ததாக வந்த சப்சார் அகமது பட் என்பவர் உட்பட 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டத்தில் சைமூ கிராமத்தில் வெள்ளி இரவு முதல் குடியிருப்புப் பகுதியில் 3 தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். முன்னதாக இதே பகுதியில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்திவிட்டு அப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் சிலர் தப்பிச் சென்றனர்.
பிறகு பாதுகாப்புப் படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர், இதில் அவர்கள் பதுங்கியிருந்த 2 வீடுகள் சண்டையில் சேதமடைந்தன.
இந்த துப்பாக்கிச் சண்டையில் முன்பு கொல்லப்பட்ட ஹிஜ்புல் கமாண்டர் புர்ஹான் வானிக்கு அடுத்ததாக வந்த சப்சார் அகமது பட் கொல்லப்பட்டார். இவர் ஆன்லைன் வீடியோக்களை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சப்சார் அகமது பட் கொலையுண்டதை உறுதி செய்த டிஜிபி எஸ்.பி.வைத், “சப்சார், ஃபைசன் என்று அடையாளம் காணப்பட்ட இருவர் துப்பாக்கிச் சண்டையில் பலியாகினர்” என்றார். இருவரது உடல்களும் என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கிடந்தது. சுட்டுக்கொல்லப்பட்ட இன்னொரு தீவிரவாதியின் உடல் காணவில்லை.
பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தில் ராம்பூர் பிரிவில் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். “இது வரை 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் காலியா தெரிவித்தார்.
இன்னும் நடவடிக்கை முடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.