Published : 03 Dec 2013 08:03 AM
Last Updated : 03 Dec 2013 08:03 AM

370-வது பிரிவு: மோடியின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடமிடுகிறது என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

மோடியின் கருத்துக்கு முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவையும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

370-வது பிரிவு காஷ்மீர் மக்களுக்கு நன்மை அளிக்கிறதா என்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜம்முவில் நடைபெற்ற கூட்டத்தில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மணீஷ் திவாரி கூறியிருப்பதாவது: “370-வது பிரிவு குறித்து பாஜக தெரிவித்துவரும் கருத்துகள், அரசியலமைப்புச் சட்டத்தை அந்த கட்சியினர் சரியாக படித்து அறிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. சமீப காலம் வரை 370-வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வந்தது. இப்போது, 370வது பிரிவு காஷ்மீர் மக்களுக்கு நன்மை அளிக்கிறதா என்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று மோடி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அந்த கட்சி இரட்டை வேடம் போடுகிறது” என்றார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், “மோடி யின் பேச்சுகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. அவர் இடத்துக்கு தகுந்தாற்போல் பேசி வருகிறார். 370-வது பிரிவு குறித்து பொது விவாதம் நடத்த பாஜக விரும்பினால் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை. ஆனால், அதற்கு முன்பு பாஜகவிற்கு உள்ளேயும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளுடனும் மோடி விவாதம் நடத்த வேண்டும். காங்கிரஸை பொறுத்தவரை 370-வது பிரிவு தொடர்பான கருத்தில் தெளிவாக உள்ளோம்” என்றார்.

மக்கள் ஜனநாயகக் கட்சி:

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாய கக் கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருமான முப்தி முகமது சயீத் கூறியதாவது:

“காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு நிரந்தரமானது. அதை ரத்து செய்ய முடியாது. அதை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றத்தால்கூட முடியாது.

அரசியலமைப்பு சட்டம் குறித்து நரேந்திர மோடிக்கு எதுவும் தெரியவில்லை. 370-வது பிரிவு குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து ஜம்மு காஷ்மீர் மாநில மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மத்திய மாநில அரசுகளின் இடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையில் மோடி பேசியுள்ளார்.

தேர்தலை மனதில் வைத்தே மோடி இவ்வாறு பேசி வருகிறார். பிரதமராக விரும்பும் மோடி, இது போன்ற விவகாரங்களில் மக்களை பிளவுபடுத்தக்கூடாது. வாஜ்பாய் வழியை பின்பற்றி மக்களை ஒன்று படுத்த மோடி முயற்சிக்க வேண்டும். காஷ்மீர் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்ற மோடியின் கருத்தும் தவறானது” என்றார்.

மார்க்சிஸ்ட்:

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் எம். ஒய். தரிகாமி கூறுகையில், “370-வது பிரிவு தொடர்பான மோடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சட்டப் பிரிவில் இடம்பெற்றுள்ள விஷயங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மத ரீதியாக மக்களை மோடி பிளவுபடுத்துகிறார் என்ற கண்ணோட்டமே அனை வரிடமும் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x