

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ் (39) உடல் நலக்குறைவால் நேற்று பெல்ஜியத்தில் உள்ள மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகேஷ் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றார். ஜெர்மனி சென்ற அவர் அங்கு தனது 39-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார். அங்கிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை பெல்ஜியம் சென்ற ராகேஷ், திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை பிரசல்ஸ் நகரிலுள்ள மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ மனையில் அனுமதித்தனர். ராகேஷின் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை முதல்வர் சித்தராமையா தனது மனைவி பார்வதி மற்றும் இளைய மகனும் மருத்துவருமான யதீந்திரா உடன் பெல்ஜியம் புறப்பட்டு சென்றார். இதனிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராகேஷுக்கு தேவையான மருத்துவ ஏற்பாடுகளை செய்திருந்தார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இந்திய நேரப்படி நேற்று மாலை 4.10 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து ராகேஷின் உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று பெங்களூரு கொண்டுவரப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள இந்திய துணை தூதரகம் செய்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பெங்களூருவில் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெற இருப்பதாக சித்தராமையாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராகேஷின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் சித்தராமையாவின் இரு மகன்களில் இளையவரான யதீந்திரா மருத்துவர் என்பதால் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இதனால் மூத்த மகனான ராகேஷ் அரசியல் ஆர்வம் காரணமாக மைசூருவில் இளைஞர் காங்கிரஸில் மும்முரமாக செயல்பட்டு வந்தார். கடந்த 2013 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு ராகேஷ் சித்தராமையாவிடம் கேட்டார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், முதலில் மக்கள் பணியில் ஈடுபடுமாறு அறிவுரை வழங்கினார்.