

தீவிரவாதத்தை வேரறுப்போம் என மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மோடி அளித்த வாக்குறுதி வெற்று கோஷமே என காங்கிரஸ் கட்சி விமரித்துள்ளது.
அண்மையில் காஷ்மீர் மாநிலத்தின் யூரி பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இச்சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள கங்கிரஸ் கட்சி, யூரி தாக்குதல் போன்ற சம்பவங்களை தடுக்க மோடி அரசு தவறிவிட்டது என விமர்சித்துள்ளது.
முன்னதாக சனிக்கிழமை கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பேசிய பிரதமர் மோடி, "பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது பாகிஸ்தான். அத்தகைய செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தான் சர்வதேச சமூகத்திலிருந்து தனித்து நிறுத்த இந்தியா ராஜதந்திரத்துடன் செயல்படும்" என்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியின் தீவிரவாத தடுப்புக் கொள்கையை கடுமையாக சாடியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சூரஜ்வாலா, "மோடியின் உரையில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து உறுதிபட ஏதுமில்லை. யூரி தாக்குதல் போன்று இனியும் நடக்காமல் இருக்க இந்த அரசு என்ன செய்யப்போகிறது என அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. தீவிரவாதத்தை வேரறுப்போம் என மக்களவை தேர்தலுக்கு முன் அவர் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் வெற்று கோஷம்" என ட்விட்டரில் சாடியுள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடியின் ஆதரவாளர்களுக்குகூட அவரது உரை திருப்திகரமாக அமையவில்லை. பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் நடத்துகிறது. பதிலுக்கு மோடி வார்த்தைகளில் ஏவுகணை அனுப்புகிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.