

நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசும் எம்.பி.க்கள் மீது தடை விதிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி அறிஞர்களை கவுரவிக்கும் விழா உ.பி. மாநிலம் எடாவில் நடைபெற்றது. அதில் பேசிய முலாயம்சிங் யாதவ்: தாய் மொழியைப் பயன்படுத்தும் நாடுகள் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன. எனவே, நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேச தடை விதிக்க வேண்டும் என்றார்.
ஓட்டு சேகரிக்கும் போது இந்தியில் பேசும் தலைவர்கள், வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பேசும் போது மட்டும் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். இது அரசியல் தலைவர்களின் இரட்டை வேடம் போடுவதையே காட்டுகிறது. இந்தியை ஊக்குவிப்பது தற்போதைய தேவையாக உள்ளது. ஆனால் நான் ஆங்கில மொழிக்கு எதிரானவனும் அல்ல என தெளிவு படுத்தினார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பிராந்திய மொழியைத் தவிர இந்தியையும் ஊக்குவிக்க வேண்டும் என்று முலாயம் சிங் கோரிக்கை விடுத்தார்.