Published : 10 Oct 2014 09:09 AM
Last Updated : 10 Oct 2014 09:09 AM

வலுக்கிறது ஹுத்ஹுத் புயல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்- உஷாராக இருக்க மத்திய அரசு உத்தரவு

ஒடிஸா, ஆந்திரா மாநிலங்களை நோக்கி நகர்ந்து வரும் 'ஹுத்ஹுத்' புயலை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய நெருக்கடி கால மேலாண்மைக் குழுவின் தலைவராக உள்ள அஜித் சேத், ஹுத்ஹுத் புயல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்று விரிவான ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, புயலை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மத்திய அமைச்சர்கள், அனைத்து துறைகள், சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அஜித் சேத் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, புயல் பாதிப்பு ஏற்பட்டால் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, தயார் நிலையில் இருக்குமாறு தமிழ்நாடு, ஆந்திரம், ஒடிஸா, மேற்குவங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எப்) 5,000 வீரர்களுக்கு (51 குழுக்கள்) உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒடிஸாவில் கஜபட்டி, கஞ்சம், குர்தா, கட்டாக், புரி, பலாசூர் ஆகிய மாவட்டங்களில் 9 என்டிஆர்எப் குழுக்களை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

162 படகுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்குத் தேவையான உபகரணங்கள் கடலோர பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்ட காற்றழுத்தம் புதன்கிழமை புயலாக மாறியது. ஒடிஸாவின் கோபால்பூருக்கு கிழக்கே 790 கி.மீ. தொலைவில் நேற்று மையம் கொண்டிருந்த இந்த புயல், கோபால்பூருக்கும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கும் இடையே 12-ம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, ஒடிஸா, ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் நாளை முதல் பலத்த மழையுடன் காற்று வீசும். புயல் கரையைக் கடக்கும்போது மிக பலத்த மழையும் கடும் புயல் காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை வாய்ப்பு

ஹுத்ஹுத் புயல் காரணமாக தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றாலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாத இறுதியில் வழக்கமாக தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு 20-ம் தேதிக்கு சற்று முன்னரே தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், தற்போது உருவாகியுள்ள புயலும், தென் மேற்கு பருவ மழையும் முடிந்த பின்னரே வட கிழக்கு பருவ மழை எப்போது தொடங்கும் என்ற தேதி அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x