ஒட்டு கேட்பு விவகாரம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலகக் கோரி பாஜக போர்க்கொடி

ஒட்டு கேட்பு விவகாரம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலகக் கோரி பாஜக போர்க்கொடி
Updated on
1 min read

கன்னட நடிகை மைத்ரி கவுடா கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட‌னர். அவர் தலைமறைவாக இருந்ததால் தொலைபேசியை ஒட்டுக் கேட்க முடிவெடுத்தனர்.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் சதானந்தகவுடாவின் அண்ணன் பாஸ்கர் கவுடா, அரசியல் உதவியாளர் திம்மே கவுடா, சதானந்த கவுடா மனைவியின் உறவினர் கவுதம், கார்த்திக் கவுடாவின் கல்லூரி நண்பர் முரளி, சதானந்த கவுடாவின் நெருங்கிய நண்பர் அசோக் பை ஆகியோரின் தொலைபேசி, செல் போன் உரையாடல்களை போலீஸார் ஒட்டுக்கேட்டுள்ளனர். இந்த 5 பேரின் தொலைபேசி உடையாடல்களை பெங் களூர் மாநகர போலீஸார் சுமார் ஒரு மாதம் ஒட்டுக் கேட்டுள்ளனர் என தகவல் கசிந்தது. இந்த தகவலை கர்நாடக உள்துறை அமைச்சகமும் பெங்களூர் மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டியும் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக எதிர்க் கட்சித்தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:

ஜனநாயக, தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கின்ற செயலை பாஜக பொறுத்துக் கொள்ளாது. இதற்கு போலீஸார் அளித்துள்ள விளக்கத்தை ஏற்கமுடியாது. கர்நாடகத்தில் மத்திய அமைச்சருக்கே மரியாதையும், சுதந் திரமும் இல்லையென்றால் மக்களுக்கு எப்படி இருக்கும்?

ஒட்டுக்கேட்பு விவகாரத்துக்கு முழு பொறுப்பேற்று முதல்வர் சித்த ராமையாவும் உள்துறை அமைச்சர் ஜார்ஜூம் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இன்னும் ஒரு வாரத் துக்குள் பதவி விலகவில்லை எனில் மாநிலம் தழுவிய அளவில் பாஜக போராட்டங்களை முன்னெடுக்கும். உயர் நீதிமன்றத்தையும் அணுகி சட்ட ரீதியிலான போராட்டத்தையும் மேற் கொள்வோம்'' என்றார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியபோது, “சதானந்த கவுடாவின் மகன் தலைமறைவாக இருந்தபோது போலீஸார் வழக்கமாக மேற்கொள்ளும் விசாரணைகளை மேற்கொண்டனர். சட்டத்துக்கு உட் பட்டே நடவடிக்கை எடுத்தனர். சதானந்த கவுடாவின் தொலைபேசி உரையாடல் களை ஒட்டுக் கேட்கவில்லை.தேவைப் பட்டால் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பாஜகவினரின் இந்த கோரிக்கையில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கிறேன்'' என்றார்.​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in