

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 66-வது நினைவு நாள் நாடு முழுவதும் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
டெல்லியில் காந்தி நினைவிடம் உள்ள ராஜ்காட்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஏ.கே.அந்தோனி, சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முப்படை தளபதிகள், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் தேசத் தந்தையின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ராஜ்காட்டில் சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஜைனர், பார்சி, புத்த மதத்தினர், சீக்கியர் என பல்வேறு மதத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
பக்திப் பாடல்களும் பாடப்பட்டன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.- பி.டி.ஐ.