Last Updated : 11 Dec, 2013 12:00 AM

 

Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

டெல்லியில் மறு தேர்தலுக்குத் தயாராகிறது பாஜக

டெல்லியில் குழப்ப நிலை நீடிக்கும் சூழலில், அங்கு மறு தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. இதனிடையே, ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக விருப்பம் தெரிவித்தது, பின்னர் தனது முடிவை மாற்றியது காங்கிரஸ்.

டெல்லியில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பாஜக கூட்டணி 32, ஆம் ஆத்மி கட்சி 28, காங்கிரஸ் 8, ஐக்கிய ஜனதா தளம் 1, சுயேச்சை 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஆட்சி அமைக்க யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஆம் ஆத்மியின் நிறுவனர்களில் ஒருவரும், பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் கடந்த திங்கள்கிழமை கூறுகையில், "டெல்லி சட்டசபையில் ஜனநாயக லோக்பால் மசோதாவை, ஆம் ஆத்மி கட்சி உறுதியளித்த அதே டிசம்பர் 29 ம் தேதி கொண்டு வருவோம் என பாஜக உறுதி அளித்தால், அக்கட்சிக்கு ஆதரவு தருவது குறித்து யோசிக்கலாம்" என்றார்.

பிரசாந்த் பூஷனின் கருத்து பற்றி பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்தன் கூறுகையில், "லோக்பால் மசோதா கொண்டுவர பாஜகவும் உறுதி கொண்டுள்ளது. இதன் மூலம், ஊழலற்ற மாநிலமாக டெல்லியை மாற்றுவோம். இதை நாங்கள் செய்ய இருப்பது, பிரசாந்த் பூஷண் அல்லது மற்றவர்கள் சொல்வதானால் அல்ல. டெல்லியில் போலியோவை இல்லாமல் செய்த எங்களால், ஊழலை ஒழிக்க முடியாதா?" என்றார்.

இந்நிலையில் பிரசாந்த் பூஷணின் கருத்தை ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று நிராகரித்தார். இது குறித்து அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், "பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் ஆதரவு தரவும் மாட்டோம், அவர்களின் ஆதரவை பெறவும் மாட்டோம். பிரசாந்த் பூஷண் கூறியது அவரது சொந்தக் கருத்து அல்லது அக்கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம். இப்போது நான் கூறுவது ஆம் ஆத்மி கட்சியின் கருத்து" என்றார் கெஜ்ரிவால்.

மேலும் இதுகுறித்து கிண்டலாக குறிப்பிட்ட கெஜ்ரிவால், "வேண்டுமானால் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அமர்ந்து பேசி டெல்லியில் கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஏனெனில் ஊழல் செய்வதில் அவர்களிடம் ஒற்றுமை காணப்படுகிறது" என்றார்.

பிரசாந்த் பூஷணின் கருத்தை கெஜ்ரிவால் மட்டுமன்றி ஆம் ஆத்மியின் பிற தலைவர்களும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுமான மணீஷ் சிசோதியா, குமார் பிஸ்வாஸ் ஆகியோரும் ஏற்கவில்லை. இதனால் பூஷண் தனது கருத்தை திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க ஆதரவளிக்கலாம் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷக்கீல் அகமது கூறுகையில், "டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க நாம் ஆதரவு தர வேண்டும் என்று இங்குள்ள தலைவர்கள் பலரும் விரும்புகிறார்கள். இது பற்றி எங்களது டெல்லி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசியபோது ஆம் ஆத்மி கட்சிக்காக நிபந்தனையற்ற ஆதரவு தரலாம் என முடிவாகி உள்ளது. இதை காங்கிரசின் தலைமைக்கு தெரிவிப்பேன். அவர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள்" என்றார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவளித்தால் அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பாண்மை கிடைத்துவிடும். டெல்லியில் மறுதேர்தலை தவிர்க்கவும், பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கவும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளதாக கருத்துகள் வெளியாகின.

ஆனால், ஷக்கீல் அகமது இவ்வாறு கூறிய சில மணி நேரங்களில், தனது விருப்பத்தை மாற்றி, ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்க முடியாது காங்கிரஸ் அறிவித்துவிட்டது.

இந்நிலையில், டெல்லியில் தேர்தல் நடத்தி முடித்ததற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தனிப்பெரும் கூட்டணி என்ற முறையில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவுக்கு டெல்லி துணைநிலை ஆளுநரான, லெப்டினன்ட் ஜெனரல் நஜீப் ஜங் அழைப்பு விடுப்பார் எனக் கருதப்படுகிறது.

இதனிடையே டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டமும் நேற்று நடைபெற்றது. டெல்லி பாஜக தேர்தல் பொறுப்பாளர் நித்தின் கட்கரி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் விஜய்கோயலும் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எனினும் பாஜக வட்டாரங்கள் தி இந்து நிருபரிடம் கூறுகையில், "ஆம் ஆத்மியை போல பாஜகவும் டெல்லியில் மீண்டும் தேர்தலை சந்திக்க விரும்புகிறது. டெல்லியில் வெற்றி பெற்றவர்களை அவர்களின் தொகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறுமாறு சொல்லியுள்ளோம். இதையே தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கும் கூறியுள்ளோம். நன்றி சொல்வது போல், பிரச்சாரத்தை தொடங்கி விடுங்கள் என்றும் கூறியுள்ளோம்" என்று தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x