Last Updated : 28 Aug, 2016 08:37 AM

 

Published : 28 Aug 2016 08:37 AM
Last Updated : 28 Aug 2016 08:37 AM

உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க முடியாது

கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழகத்துக்கு சுமார் 51 டிஎம்சி நீரை காவிரியில் திறந்துவிட முடியாது. தமிழக அரசின் கோரிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று கர்நாடக அனைத்துக் க‌ட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி ஆகஸ்ட் மாதத்துக்குள் தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டிய நீரில் நிலுவையில் உள்ள 50.052 டிஎம்சி நீரை உடனடியாக காவிரியில் திறந்துவிடுமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மனு தாக்கல் செய்தது. இம்மனு வருகிற செப்டம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசின் மனுவை எதிர்கொள்வது தொடர்பாக கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை நேற்று கூட்டியது. பெங்க ளூருவில் உள்ள விதானசவுதாவில் க‌ர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந் திரா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர்கள் வீரப்ப மொய்லி (காங்கிரஸ்), ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக), குமாரசாமி (மஜத) உட்பட பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு, கர்நாடக விவசாயிகளின் நிலை, அணை களின் நீர்மட்ட நிலவரம், கர்நாடக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்கக் கூடாது என காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய அனைத்துக் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர்.

போதிய நீர் இல்லை

பின்னர் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவ‌து:

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ‌மழை போதிய அளவில் பெய்யாததால் அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை. பருவமழை நல்ல முறையில் பெய்யும் காலங்களில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளுக்கு ஆகஸ்ட் 24-ம் தேதி சராசரியாக 195.25 டிஎம்சி வரை நீர்வரத்து இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு அணைகளுக்கும் 108 டிஎம்சி வரை மட்டுமே நீர் வந்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 29 டிஎம்சி நீரும், கர்நாடகாவுக்கு பாசனத்துக்கும், குடிநீருக்கும் சேர்த்து 28 டிஎம்சி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

த‌ற்போது கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் 51 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதில் பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 40 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. தமிழக அரசு கோரிய 50.052 டிஎம்சி நீரை திறந்துவிட வாய்ப்பே இல்லை. எனவே தமிழக அரசு மேட்டூர் அணையில், தற்போது உள்ள 34 டிஎம்சி தண்ணீரை கொண்டு சமாளித்துக்கொள்ள வேண்டும்.

பருவமழை பொய்த்ததால் கர்நாடகாவுக்கு குடிநீருக்கே போதிய நீர் இல்லை. இந்நிலையில் தமிழகத்துக்கு பாசனத்துக்கு எப்படி நீர் திறந்துவிட முடியும். கர்நாடகாவில் இக்கட்டான நிலை நிலவுவதால் தமிழகத்துக்கு சுமார் 51 டிஎம்சி நீரை காவிரியில் திறந்துவிட முடியாது. தமிழக அரசின் மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி யினரின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்ப‌ட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக கர்நாடக அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே கர்நாடக அரசு சட்டப் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருக்கிறது.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் அனந்த்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

வறட்சிக் காலத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை பின்பற்றுவதில் பெரும் சிக்கல் இருக்கிறது. எனவே இப்போதைய நிலையில் த‌மிழகத்துக்கு காவிரி நீரை தர முடியாது. கர்நாடகாவின் மக்கள், மண், நீர் ஆகிய விவகாரத்தில் நான் எப்போதும் கர்நாடகாவின் பக்கமே இருப்பேன். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமையை விட்டுத்தர முடியாது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x