

டெல்லி போலீஸின் பொருளாதார குற்றப்பிரிவு வெள்ளிக்கிழமையன்று மோசடி வழக்கில் யூனிடெக் ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குநர்களான சஞ்சய் சந்திரா, இவரது சகோதரர் அஜய் சந்திரா ஆகியோரை கைது செய்தனர்.
ரிமாண்ட் நடைமுறைகளுக்காக இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, “குருகிராம் செக்டார் 70-ல் வீடுகட்டித் தரும் திட்டத்தை முடிக்கவில்லை. திட்டத்தை தொடங்கும் முன் முறையான அனுமதிகளை தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் பெறவில்லை.
வீடுகளை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டதால் பணத்தை திருப்பித் தருமாறு வாடிக்கையாளர்கள் கேட்ட போது பணத்தையும் திருப்பித் தரவில்லை. பல பேரை போலி ஆவணங்களில் ஏமாற்றியதாகவும் இந்நிறுவனம் மீது சுமார் ரூ.35 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக 95 புகார்கள் பதிவாகியுள்ளன.” என்றார்.
தற்போது இவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் முதல் தகவலறிக்கை பதியப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்கள்: பிடிஐ
குறித்த நேரத்தில் கட்டிமுடித்த பிளாட்களை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் இழுத்தடித்ததாக 12-க்கும் மேற்பட்டோர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தை அணுகினர். 2012-லேயே வீடுகளை கட்டி ஒப்படைப்பதாக இந்நிறுவனம் வாக்குறுதி அளித்தது. ஆனால் இதனை காப்பாற்றவில்லை.
இதனையடுத்து தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், வாடிக்கையாளர்களுக்கு வட்டியுடன் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு யுனிடெக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜூன் 12, 2017-ல் இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் உச்ச நீதிமன்ற பதிவாளர்களிடத்தில் டெபாசிட் செய்த ரூ.2 கோடிப் பணத்தை வீடு வேண்டாம் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கோரிய 39 வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.