நக்சல் கண்ணிவெடி தாக்குதல்: பீகாரில் 7 போலீஸ்காரர்கள் பலி

நக்சல் கண்ணிவெடி தாக்குதல்: பீகாரில் 7 போலீஸ்காரர்கள் பலி
Updated on
1 min read

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் நக்சல்கள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய கண்ணிவெடித் தாக்குதலில் 7 போலீசார் உயிரிழந்தனர்.

தலைநகர் பாட்னாவில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் ஜார்க்கண்ட் மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது தாண்டுவா போலீஸ் நிலையம். அந்த நிலையத்தைச் சேர்ந்த போலீசார், நபிநகரில் உள்ள இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தனர். மாலை 4 மணி அளவில் சந்திராகர் பகுதியில் போலீஸ் ஜீப் வந்து கொண்டிருந்தபோது நக்சல்கள் புதைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த கண்ணிவெடி பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் ஜீப் தூக்கி வீசப்பட்டது.

ஜீப்பில் பயணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், 5 போலீஸ்காரர்கள், ஊர்க் காவல் படையைச் சேர்ந்த டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நக்சல்கள் அந்தப் பகுதியில் மறைந்து இருந்ததாகவும் போலீஸ் ஜீப் வெடித்துச் சிதறிய பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப் பகுதியில் மேலும் சில இடங்களில் நக்சல்கள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் போலீஸார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை சாகேப்கன்ஞ்-தானாபூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே வந்தபோது நக்சல்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ரயில்வே போலீஸார் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர். இரண்டு நாள்களுக்குள் போலீஸாரை குறிவைத்து மீண்டும் ஒரு தாக்குதலை நக்சல்கள் நடத்தியுள்ளனர்.

முதல்வர் அவசர ஆலோசனை

கண்ணிவெடித் தாக்குதலைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைநகர் பாட்னாவில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். நக்சல்கள் தீவிரவாத பாதையைக் கைவிட்டு ஜனநாயகத்துக்கு திரும்பும் வகையில் சிறப்பு மன்னிப்பு திட்டத்துக்கு பீகார் அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. அதன்பின்னரும் நக்சல்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அவர்களைக் கட்டுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே முதல்வர் நிதிஷ்குமாரின் மென்மையான போக்கு காரணமாகவே நக்சல் பிரச்சினை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்தத் தலைவருமான சுஷீல்குமார் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in