Last Updated : 26 Aug, 2015 02:46 PM

 

Published : 26 Aug 2015 02:46 PM
Last Updated : 26 Aug 2015 02:46 PM

வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது: குஜராத் படேல் சமூகத்தினருக்கு பிரதமர் மோடி அறிவுரை

குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள படேல் சமூகத்தினர் வன்முறையை விடுத்து அமைதி காக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து இன்று பந்த் நடைபெறுகிறது.

முன்னதாக, நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) போராட்டக்காரர்களால் 50-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகமதாபாத், சூரத், மேஷனா, விஸ்நகர், உஞ்சா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ மூலம் வன்முறையை கைவிடுமாறு படேல் சமூகத்தினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், "குஜராத மாநில சகோதர, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

வன்முறையால் யாருக்கும் ஆதாயம் இல்லை. வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது. குஜராத் மகாத்மா காந்தியும், சர்தார் படேலும் பிறந்த மண். அங்கு வன்முறை கூடாது. குஜராத் மக்கள் இப்போது பின்பற்ற வேண்டிய ஒரே மந்திரம் 'அமைதி'.

படேல் சமூகத்தினர் தங்கள் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்வதற்கு அமைதிப் பேச்சுவார்த்தையே சரியான வழியாகும். பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு நிச்சயம் வலியுறுத்தும்.

எனவே, வன்முறையைக் கைவிடுமாறு மீண்டும் குஜராத் மக்களிடம் வேண்டுகிறேன்" எனக் கோரியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x