

டெல்லி அருகேவுள்ள குருகிராம் நகரில் வங்கி ஒன்றில் நடக்கவிருந்த வங்கிக் கொள்ளையை இரு பெண் பணியாளர்கள் தைரியமாக எதிர்கொண்டு முறியடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிம்லா தேவி (42), பூனம் என்ற இரு பெண் பணியாளர்கள்தான் திங்கட்கிழமை மதியம் குருகிராம் வங்கியில் நடக்க விருந்த கொள்ளைச் சம்பவத்தை முறியடித்துள்ளனர். பூனம் ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கொள்ளையர்களை பிம்லா தேவி மற்றும் பூனம் எதிர்கொண்ட சினிமா பாணியிலான காட்சிகள் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,
சிசிடிவியில் பதிவான காட்சிகளின் விவரம், வங்கியில் நுழைந்த இரு கொள்ளையர்கள் அங்குள்ள பணியாளர்களைத் தாக்குகின்றனர். அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியை பிம்லா தேவியும், பூனமும் லாவகமாகப் பிடுங்கி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டு கூக்குரல் இடுகின்றனர். அவர்களது சத்தத்தைக் கேட்டு பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் கொள்ளையர்களைப் பிடிக்க உதவுகின்றனர். இக்காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து இரு கொள்ளையர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பிம்லா தேவி கூறும்போது, "நானும் எனது சக பணியாளரும் உயிரைப் பணயம் வைத்து கொள்ளையர்களிடம் சண்டையிட்டோம். வழக்கமாக வங்கியில் 4 அல்லது 5 ஆண் பணியாளர்கள் இருப்பார்கள், ஆனால் அலுவலக வேலையாக திங்கட்கிழமை மதியம் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டுதான் கொள்ளையர்கள் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். கொள்ளையர்களை நாங்கள் முதலில் வங்கியின் வாடிக்கையாளர்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர்கள் துப்பாக்கியைக் கொண்டு எங்களை பிணயக் கைதிகளாக வைக்க முயற்சித்தனர். எனினும் அவர்களிடமிருந்து நாங்கள் துப்பாக்கியைப் பறித்து விட்டோம்" என்றார்.
கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்ட வங்கியில் 2.5 லட்சம் பணம் இருந்துள்ளது. கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இருவரும் தாத்ரியைச் சேர்ந்த தீபக், மோகித் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.