

மத்திய அரசு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் செய்துள்ள முதலீட்டுக்காக 2013-14-ம் ஆண்டுக்கான பங்கு ஈவுத்தொகையாக ரூ.422 கோடியே 78 லட்சத்தை மத்திய அரசுக்கு வழங்கியது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 2013-14-ம் நிதியாண்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரூ.1501 கோடியே 88 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 24-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிறுவனத்தின் 58-வது ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் பங்குதாரர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள 10 சதவீதம் இடைக்கால பங்கு ஈவுத்தொகை உட்பட அவர்களது முதலீட்டில் 28 சதவீதம் மொத்தப் பங்கு ஈவுத்தொகையாக வழங்கப்படுமென பங்குதாரர்களின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டது.
என்எல்சி நிறுவனத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள முதலீட்டுக்காக மத்திய அரசுக்கு என்எல்சி ரூ.422 கோடியே 78 லட்சத்தை பங்கு ஈவுத்தொகையாக வழங்க வேண்டும். இவற்றில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இடைக்கால பங்கு ஈவுத்தொகைக்காக இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.150 கோடியே 99 லட்சம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் செயலர் ஸ்ரீவத்ஸவா மற்றும் இணைச் செயலர் பல்லா ஆகியோர் முன்னிலையில் என்எல்சி தலைவர் சுரேந்திரமோகன் எஞ்சிய பங்கு ஈவுத்தொகையான ரூ. 271 கோடியே 79 லட்சத்துக்கான காசோலையை மத்திய மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறைக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) பியூஷ் கோயலிடம் வழங்கினார்.
இதன் மூலம் என்எல்சி நிறுவனம் மத்திய அரசுக்கு மொத்தம் ரூ. 422 கோடியே 78 லட்சத்தை பங்கு ஈவுத் தொகையாக வழங்கியுள்ளது. 2013-2014ம் ஆண்டுக்கான பங்கு ஈவுத்தொகை வழங்கும் வகையில் பகிர்மான வரி உட்பட என்எல்சி நிறுவனத்துக்கு ரூ.549 கோடியே 59 லட்சம் செலவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.