

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்தத் தண்டனையின் காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின்படி, லாலு பிரசாத் யாதவியின் எம்.பி. பதவி பறிக்கப்படுவதுடன், அவரால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக, லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.
இதே வழக்கில், பிகாரின் மற்றொரு முன்னாள் முதல்வரான ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவ், 1990 ஆம் ஆண்டு பிகார் முதல்வராக இருந்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும் திட்டத்தில் ரூ.900 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக மொத்தம் 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், சாய்பாஸா மாவட்ட கருவூலத்தில் இருந்து ரூ.37.7 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டின் மீது, லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக அவர் மீது பதியப்பட்டுள்ள ஆறு வழக்குகளில் இந்த வழக்கில்தான் முதன் முறையாக அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில், பிகார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்பி ஜெகதீஸ் சர்மா மற்றும் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 45 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
17 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 45 பேரும் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரவாஸ் குமார் சிங் இத்தீர்ப்பை திங்கள்கிழமை வழங்கினார்.
இந்த நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
லாலு தற்போது ஹோத்வாரில் உள்ள பீர்ஸா முண்டா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தவிர, பிகார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் 36 குற்றவாளிகளும், சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவழக்குகளில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கால சிறைத் தண்டனை பெறும் எம்எல்ஏ, எம்.பி.க்களை தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே பதவியைப் பறிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது எம்.பி. பதவி பறிக்கப்படும். அத்துடன், அவரால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.