

தெற்கு காஷ்மீர் பஹல்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து வாகனத்துடன் மோதியதில் ஓட்டுநர் உட்பட 2 பேர் பலியாகினர். 22 பேர் காயமடைந்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த முஸ்லிம்கள் மீட்புப் பணி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் முக்கியத் தளபதியான புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பல இடங்களில் கலவரங்கள் வெடித்தன. அதனைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
கலவரங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கப்படுவதாக ராஜ் நாத் சிங் கூறினார்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காஷ்மீர் பஹல்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த முஸ்லிம்கள் மீட்புப் பணிகளில் ஈடுப்பட்டனர். காயமடைந்த யாத்ரீகர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முப்தி கூறியதாவது:
”விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணீயில் ஈடுப்பட்டு, அமர்நாத் யாத்ரீகர்களுக்கு உதவிய ஹல்முல்ல, பிஜ்பிஹாரா சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தங்கள் மீது நடத்திய தாக்குதல்களில் பலர் தங்கள் சொந்தங்களை இழந்துள்ளனர். எனினும் அதனை பொருட்படுத்தாமல் எம்மக்கள் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதுதான், காஷ்மீரின் தனித்துவமான பாரம்பரியம்”. என்றார்.
விபத்து குறித்து பாஜகவின் அமைச்சர் பிரியா சேத்தி கூறும்போது, ''காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நடத்த விபத்து தவிர்க்கமுடியாதது. 25,000க்கும் அதிகமான பக்தர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் பக்தர்கள் எந்தவித இடையூறுமின்றி அமர்நாத் யாத்திரையை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இறுதியில், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்திருப்பதாகக் கூறினார்.