

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால் பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளுக்குமே இத்தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ் டிரத்தில் 1,699 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 4,119 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் தரப்பில் 287 பேரும், பாஜக தரப்பில் 280 பேர், சிவசேனா தரப்பில் 282 பேர், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் 278 பேர், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தரப்பில் 219 பேர் போட்டியிடுகின்றனர்.
நான்கு முனைப் போட்டி
காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும், பாஜக-சிவசேனைக் கூட்டணியும் முறிந் ததால் நான்கு கட்சிகளும் தனித் தனியே களம்காண்கின்றன. இந்த நான்கு கட்சிகளும் தங்களின் பலத்தை நிரூபிக்கப் போராடுவதால் இங்கு நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் சேனா முக்கியக் கட்சியாக உருவெடுக்க முயல்கிறது. மகாராஷ்டிரத்தில் பிரதமர் மோடி 27 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் மரணமடைந்ததால், மொத்த மகாராஷ்டிரத்தையும் கவரும் அளவுக்கு பாஜகவில் பிரபலமான தலைவர்கள் இல்லை. எனவே, பிரதமர் மோடியை நம்பி பாஜக களம் காண்கிறது.
பதற்றமான மையங்கள்
மகாராஷ்டிரத்தில் 10 சதவீத வாக்குப்பதிவு மையங்கள் பதற்ற மானவையாக அறிவிக்கப் பட்டுள்ளன. மொத்தம் 91,376 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. இதில், 9,900 வாக்குப் பதிவு மையங்கள் அதிக பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு
இங்கு பாதுகாப்புப் பணியில் 35,000 மாநில காவல்துறையினர், 12 கம்பெனி மாநில ரிசர்வ் போலீஸார், 17 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், 11,500 ஊர்க்காவல்படையினர், அதிவிரைவுப் படையினர், பறக்கும் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
ஹரியாணா
ஹரியாணாவில் முதன்முறை யாக பாஜகவை ஆட்சியிலமர்த்தும் முயற்சியில் பிரதமர் மோடி இங்கு 11 பிரச்சாரக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப் பற்றும் முயற்சியில் சோனியா காந்தியும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இங்கு மொத்தம் 1.63 வாக்காளர்கள் வாக்களிக்க வுள்ளனர். இதில், 87.37 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள். 16,357 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு, 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 109 பேர் பெண் வேட்பாளர்கள்.
ஹரியாணாவில், ஜாமீனில் வெளி வந்து, இந்திய தேசிய லோக் தளம் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா பிரச்சாரம் மேற்கொண்டதால், அவரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்.
வாக்கு எண்ணிக்கை
இருமாநிலங்களிலும் வரும் 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மோடி மற்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான மக்களின் கருத்துகளைத் தெரிவிக்கும் விதத்தில் அமையும் என கருதப்படுவதால், இருமாநில்த தேர்தல் முக்கியத் துவம் வாய்ந்த தாகக் கருதப்படுகிறது.