

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நான் நீக்கப்படவில்லை, நானாக முன்வந்து ராஜினாமா செய்தேன் என்று ஜெயந்தி நடராஜன் கூறினார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் சனிக்கிழமை விலகினார். வளர்ச்சித் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்குவதில் கால தாமதம் செய்து வந்ததால் அவர் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
நான் எந்தத் திட்டத்தையும் நிறுத்தி வைக்கவில்லை. எந்தத் திட்டங்களும் நிலுவையில் இல்லை. நான் பதவி விலகியதற்கு நூறு சதவீதம் கட்சிப் பணிகளே காரணம். வேறு காரணங்கள் இல்லை.
எனது பதவிக் காலத்தில் சரியான முடிவுகளே எடுக்கப்பட்டன. தொழில் திட்டங்க ளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கு வதில் கால தாமதம் செய்ததாக கூறப்படுவதை ஏற்க முடியாது. உத்தரகண்ட் மாநி லத்தில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு அணைகள் மற்றும் நீர்மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கு வதில் நான் அச்சப்பட்டது உண்மை. சட்டபூர்வ சுற்றுச்சூழல் பிரச்சி னைகள் இருப்பதால் இத்திட்டங்கள் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.
மொத்த வளர்ச்சித் திட்டங்க ளில் 8 சதவீதம் மட்டுமே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் அனுமதிக்கு வந்தன. 92 சதவீத திட்டங்களுக்கு அந்தந்த மாநில அரசுகளே அனுமதி அளித்துள்ளன. எனது துறையில் எந்தத் திட்டமும் நிலுவையில் இல்லை. அனுமதி வழங்கும் நடைமுறை வெளிப்படையானது. மனு எந்த நிலையில் இருக்கிறது என்பதை இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்” என்றார் ஜெயந்தி நடராஜன்.
தமிழகத்தைச் சேர்ந்த, மாநிலங்க ளவை உறுப்பினராக ஜெயந்தி நடராஜன் 2 ஆண்டுகளுக்கு முன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தொழில் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து கவலை தெரிவித்திருந்தார்.