

ஜம்மு காஷ்மீர் ரஜவுரி மாவட்டம் நவ்ஷெரா அருகே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய நிலைகள் மீதும் கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
இதற்கு நமது ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. எனினும், பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் எல்லையோர கிராம மக்கள் 2 பேர் பலியாயினர் 3 பேர் காய மடைந்தனர்.
இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் சித்திபக்ரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ரஜவுரி மாவட்ட காவல் துறை துணை ஆணையர் ஷாஹித் இக்பால் சவுத்ரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “மஞ்சகோட் பகுதி யிலும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் 7 கிராமங்களில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால், எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 978 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப் பான முகாம்களில் தங்க வைக் கப்பட்டுள்ளனர். நவ்ஷெரா பகுதியில் உள்ள 51 பள்ளிகள் காலவரையின்றியும் மஞ்சகோட் பகுதியில் உள்ள 36 பள்ளிகள் 3 நாட்களுக்கும் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள இந்த 87 பள்ளிக்கூடங்களில் 4,600 மாணவர்கள் படித்து வருகின்றனர்” என்றார்.
தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
குப்வாரா மாவட்டம் பகத்புரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நேற்று அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிரவாதிகளைத் தேடினர். அப்போது, மறைந்திருந்த தீவிர வாதிகள் பாதுகாப்புப் படையி னரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் பலியானதாக ராணுவ அதிகாரி தெரிவித்தார். அவர்களிடமிருந்து 2 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.