

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்டுள்ள 5 ஆண்டு சிறைத் தண்டனையைக் குறைப்பதற்கான வழிகளை ஆராயுமாறு மகாராஷ்டிர மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 5 ஆண்டுகளாகக் குறைத்தது. சஞ்சய் தத் ஏற்கெனவே 18 மாதங்கள் தண்டனையை அனுபவித்து விட்டார். புணே ஏராவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் (53) இப்போது பரோலில் வெளியே உள்ளார்.
இந்நிலையில், சஞ்சய் தத், 70 வயது மூதாட்டி ஒருவர் உள்பட 3 பேரை கருணை அடிப்படையில் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதனை பிரணாப், மகாராஷ்டிர மாநில அரசுக்கு அனுப்பி வைப்பார் என்று தெரிகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் அணுகியுள்ளது.
சஞ்சய் தத் சிறையில் ஒழுங்காக நடந்து கொண்டார் என்று சிறை வார்டன் அளிக்கும் நற்சான்று உள்ளிட்ட சில விஷயங்கள் மூலம் அவரை சிறையில் இருந்து விடுவிக்க வாய்ப்பு உள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.