

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் இன்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. பிற இடங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி, ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. பிரிவினைவாதிகளின் தொடர் போராட்ட அறிவிப்புகளால் அங்கு கடந்த 2 மாதங்களாக பதற்றம் நீடிக்கிறது.
பக்ரீத் பண்டிகை நாளாக நேற்று ஸ்ரீநகரில் உள்ள ஐ.நா. கண்காணிப்பு அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் செல்லுமாறு மக்களுக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்தனர். இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கின் 10 மாவட்டங்களிலும் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் பண்டிப்போரா மற்றும் பான்போராவில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையிலான மோதலில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதனால் காஷ்மீரில் கடந்த 2 மாத வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் தெற்கு காஷ்மீரில் உள்ள பனிஹாலில் இருந்து வடக்கு காஷ்மீரில் உள்ள உரி வரை, நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளை கைப்பற்றுமாறு மக்களுக்கு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து பாரமுல்லா, தங்மார்க், பட்டான், ஹண்டுவாரா ஆகிய நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. பிற இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காஷ்மீர் பள்ளதாக்கில் இன்று, முதலில் சில மணி நேரம் அமைதியாக கழிந்தாலும், பின்னர் பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழத் தொடங்கின.
சிஆர்பிஎப் விடுத்த செய்தியில், “காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 67 கல்வீச்சு சம்பவங்களை சிஆர்பிஎப் எதிர்கொண்டது. இதில் 16 வீரர்கள் காயம் அடைந்தனர். 3 வாகனங்கள் சேதம் அடைந்தன” என்று தெரிவித்தது.
ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாதிகளின் போராட்ட அறிவிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவுகளால் 68-வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.