

மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகை ரேகா ஆகியோர் அவைக்கு சரியாக வராதது குறித்து எம்.பி.க்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.ராஜீவி, "மாநிலங்களவை உறுப்பினரான சச்சின் மற்றும் ரேகா ஆகியோர் அவைக்கு வருவதில்லை. அவர்கள் இதற்காக அனுமதி ஏதேனும் பெற்றுள்ளனரா?
அரசியலமைப்பு சட்டத்தின்படி, உறுப்பினர்கள் 60 நாட்களாக அவைக்கு வராமல் இருந்தால், அவர்களது பதவு காலியானதாக கருதப்பட வேண்டும். சச்சின் டெண்டுல்கர் 3 நாட்களும், ரேகா 7 நாட்களும் மட்டுமே இதுவரை அவைக்கு வந்துள்ளனர். எனவே, இருவரின் பதவியையும் காலி செய்ய வேண்டும். அடுத்தக் கூட்டத் தொடருக்கு அனுமதிக்கக் கூடாது" என்றார் அவர்.
இதனை அடுத்து பேசிய அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், "அரசியலமைப்புச் சட்டம் 104-ன்படி, இரு அவைகளிலும் ஒரு எம்.பி. 60 நாட்கள் வரவில்லை என்றால், அவர்கள் இடம் காலியானதாக கருதப்படும். சச்சின் டெண்டுல்கர் 40 நாட்கள் அவைக்கு வரவில்லை. ரேகா அதைவிடக் குறைவு. எனவே, இருவரும் அரசிலமைப்பு விதிகளை மீறவில்லை" என்றார்.
இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே பத்திரிகையாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் டி.பி.திரிபாதி, "சச்சினை ஒரு நல்ல விளையாட்டு வீரராக எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ரேகாவும் சிறந்த நடிகை. ஆனால் மாநிலங்களவைக்காக நியமிக்கப்பட்ட இவர்களில் நடத்தை மிகவும் இழிவாக உள்ளது.
இவ்விருவரின் நடத்தையால், நாடாளுமன்றமும் அரசியலமைப்பு சட்டமும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது. இவர்கள் அடுத்த கூட்டத்தொடருக்கு அனுமதிக்கப்படக் கூடாது. சச்சின் மற்றும் ரேகாவுடன் வேறு சிலரும் இதுபோன்ற நடந்து கொள்கின்றனர்" என்றார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு உறுப்பினராக பதவியேற்ற சச்சின், விளையாட்டுத் துறைக்காக அவையில் ஆதரவுக் குரல் தருவேன் என்று உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.