

‘‘நான் இருக்கும் வரையில் சமாஜ் வாதி கட்சியில் பிளவு ஏற்படாது’’ என்று முலாயம் சிங் தெரிவித்தார்.
முலாயம் சிங்கின் மூத்த தம்பி சிவ்பாலுக்கும் மகன் அகிலேஷுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் சமாஜ்வாதி கட்சியில் மோதல் முற்றி உள்ளது. இதுகுறித்து கடந்த 3 நாட்களாக அமைதி காத்த முலாயம் நேற்று லக்னோவில் சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:
நான் இருக்கும் வரையில் கட்சியில் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது மகன் முதல்வர் அகிலேஷ் யாதவ் என் னுடைய வார்த்தையை மீற மாட்டார். அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப் பட்ட சுரங்கத் துறை அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மீண்டும் கேபினட் அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்படுவார். (சிவ்பால் யாத வின் நம்பிக்கைக்கு உரியவரான இவரை பதவி நீக்கியதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்று கூறப்படுகிறது.)
சமாஜ்வாதி கட்சி என்பது மிகப்பெரிய குடும்பம் போன்றது. அதில் சில கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜம்தான். ஆனால், சிவ்பால் அகிலேஷ் - ராம் கோபால் இடையில் சண்டை எதுவும் இல்லை. இது தேர்தல் நேரம். இந்த வேளையில் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும். கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் ஊடகங்களுக்கு தவறான தகவல்களை தந்து திசை திருப்பிவருகின்றனர். இவ்வாறு முலாயம் சிங் கூறினார்.