

உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க மாயாவதியுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதாக அகிலேஷ்சிங் யாதவ் கூறியுள்ளார்.
ஐந்து மாநில சட்டப்பேரவையின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் உபி சட்டப்பேரவைக்கு அதிக தொகுதிகளாக பாஜகவிற்கு கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஒருசில கணிப்புகள் மட்டுமே பாஜக் ஆஅட்சி அமைக்கும் எனக் கூறியுள்ளது. இந்தநிலையில், தொங்குசபை ஏற்பட்டால் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், தன் எதிர்கட்சியான பகுஜன் சமாஜுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதாகக் குறிப்புணர்த்தியுள்ளார்.
இது குறித்து அவர் கணிப்புகள் வெளியான பின் பிபிசியின் இந்திமொழி வானொலிக்கு அளித்த பேட்டியில், ’ஆட்சி அமைப்பதில் சமாஜ்வாதிக்கு தனிமெஜாரிட்டி கிடைக்கவில்லை எனில், பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க பகுஜன் சமாஜுடன் கைகோர்க்கத் தயங்க மாட்டோம். ஏனெனில், குடியரசு தலைவர் ஆட்சி எனும் பெயரில் உபி மத்தியில் உள்ள பாஜகவின் மறைமுகப் பிடியில் சிக்குவதை எவரும் விரும்பவில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் கடந்த 2012-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தனிமெஜாரிட்டியுடன் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் எவரும் எதிர்பாராவண்ணம் முலாயம் தன் மகன் அகிலேஷை உபியின் முதல்வராக அமர வைத்தார். இவர், உபியில் எந்த ஆட்சியிலும் இல்லாத வளர்ச்சித்திட்டங்களை தான் செய்ததாகக் கூறி வந்தார். எனினும், இங்குள்ள முஸ்லீம் வாக்குகள் பிரிவதை தடுக்க காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார். இதன் பிறகும் உபியில் அதிக தொகுதிகள் பெறும் கட்சி என பாஜக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்கூட்டியே தயாராகும் பொருட்டு அகிலேஷ் தன் நட்புக்கரங்களை மாயாவதியிடம் நீட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 5-ல் துவங்கி மார்ச் 8 வரை என நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் மக்களவை தேர்தலுக்கான முன்னோடியாகக் கருதப்படுகிறது. இதன் முடிவுகள் 2019-ல் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பது பொதுவானக் கணிப்பாகவும் இருக்கிறது. இதில், பாஜகவிற்கு கிடைக்கும் வெற்றியை பொறுத்து பிரதமர் நரேந்தர மோடிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே, ஐந்து மாநிலங்களுக்கு மார்ச் 11-ல் வெளியாகும் இறுதி முடிவுகள் மீது பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.