

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் அதில் ஆளுநர்களின் பங்கு தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே காராசார விவாதம் நடைபெற்றது.
ஆளுநர்களின் தலையீட்டால் உத்தராகண்ட், அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது.
அவையின் காங்கிரஸ் கட்சி துணைத் தலவைர் ஆனந்த் சர்மா பேசும்போது, “இந்த நடவடிக்கை கள் அப்பட்டமான அரசியலமைப்புச் சட்ட மீறல், ஜனநாயகத்தை அவ மதிக்கும் செயல். இது தேசத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. உத்தராகண்ட் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
ஆளுநர் தினசரி நடவடிக்கை களில் தலையிட முடியாது. தன்னிச்சையாக முடிவெடுத்தனர், அரசியலமைப்புச் சட்டத்துக்கு மரியாதை அளிக்கவில்லை. மக்களின் தீர்ப்புக்கு அவமதிப்பு செய்யப்பட்டது. ஆளுநர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. தேர்ந் தெடுக்கப்பட்ட அரசை குறைத்து மதிப்பிடக்கூடாது.
உச்ச நீதிமன்றம் கண்டித்து தீர்ப்பளித்த பிறகும் உத்தராகண்ட் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். நடந்தது வெட்கக் கேடானது”, என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வெங்கய்ய நாயுடு, சாத்தான் வேதம் ஓதுகிறது என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் பேசிய வெங்கய்ய நாயுடு, “இப்பிரச்சினையை எழுப்ப காங்கிரஸுக்கு தார்மீக உரிமை இல்லை. அக்கட்சி 356-வது சட்டப்பிரிவை குறைந்தது 100 முறையாவது தவறாகப் பயன்படுத்தி இருக்கிறது.
அக்கட்சி, நீதிபோதனை செய் கிறது. சர்க்காரியா கமிஷன் 356 சட்டப்பிரிவு தவறாகப் பயன் படுத்தப்பட்டதை அம்பலப் படுத்தியது. உத்தராகண்டிலும், அருணாசலப்பிரதேசத்திலும் அரசியல் சிக்கல் காரணமாகவே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.” என்றார்.
காங்கிரஸ் முதல்வர் பெரும் பான்மை இல்லாமல் ராஜினாமா செய்ததையும் வெங்கய்ய சுட்டிக்காட்டினார்.
இதனால், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த், இரு மாநிலங்களிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டதற்கும், ஆளுநர்களின் செயல்பாட்டுக்கும் கண்டனம் தெரிவித்தார்.