

சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவராக சிவ்பால் நியமிக் கப்பட்டதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், நேற்று திடீரென அவருக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும் போராட்டத்தை நடத்திய தொண்டர்களையும் அமைதி காக்கும்படி அறிவுறுத்தினார்.
உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பாவான சிவ்பால் யாதவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அகிலேஷின் மாநிலத் தலைவர் பதவியை பறித்து, சிவ்பால் யாதவிடம், தேசிய தலைவரான முலாயம் சிங் ஒப்படைத்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த அகிலேஷ், அமைச்சர் சிவ்பால் வசம் இருந்த முக்கிய இலாகாக்களை பறித்து பதிலடி கொடுத்தார். இதையடுத்து சிவ்பால் மாநிலத் தலைவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தார்.
இருவரையும் அழைத்து சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் சமாதானம் செய்தார். இந்நிலையில் சிவ்பால் அகிலேஷ் ஆதரவாளர்கள், லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி தலைமை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இரு கோஷ்டியினரும் அகிலேஷ், சிவ்பால் புகைப்படங்கள், போஸ்டர்களை ஏந்தியபடி கட்சி அலுவலகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோதல் வெடிக்கும் சூழல் உருவானதால் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது அகிலேஷின் ஆதரவாளர்கள் மரங்களின் மீது ஏறி, சிவ்பாலுக்கு எதிராக கோஷமிட்டனர். சமாஜ்வாதி மாநில தலைவர் பதவியில் இருந்து சிவ்பாலை நீக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முலாயம் வீடு முற்றுகை
இதற்கிடையில், விக்ரமாதித்யா மார்க் பகுதியில் தேசிய கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் இல்லத்தை அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் லக்னோவில் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், ‘‘சமாஜ்வாதி யின் மாநிலத் தலைவராக சிவ்பால் நியமிக்கப்பட்டதற்காக நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தவிர எனது முழு ஆதரவையும் அவருக்கு தெரிவித்துக் கொண் டேன். எனவே தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட வேண்டும். கண்டன முழக்கம் எழுப்புவதோ, பதாகை களை ஏந்துவதோ கூடாது. இது தேர்தல் சமயம். எனவே வெற்றியை மனதில் கொண்டு தொண்டர்கள் உழைக்க வேண்டும்’’ என்றார்.
முலாயம் உத்தரவு
இதேபோல் சமாஜ்வாதி தேசிய தலைவரான முலாயம் சிங்கும், தொண்டர்களின் இந்த நடத்தைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ‘‘கட்சிக் குள் இப்படி சண்டை நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். கட்சி இந்த அளவுக்கு வளர, கடினமாக உழைத்தி ருக்கிறேன். எனவே இத்தகைய கோமாளித்தனமான செயல்களை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்’’ என அறிவுறுத்தியுள் ளார்.