

டெல்லி துணை நிலை ஆளுநர் அறிவுரையையும் மீறி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி அரசு கொண்டுவர உள்ள ஜன்லோக்பால் மசோதாவுக்கு, ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சியான பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஜன்லோக்பால் மசோதா விவகாரத்தில் எத்தகைய எல்லைக்கும் செல்லத் தயார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என சபாநாயகருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
டெல்லி சட்டப்பேரவையில், நேற்று ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முயன்றபோது, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.
எதிர்ப்புகளை மீறி இன்று பிற்பகல் சட்ட அமைச்சர் சோம்நாத் சாட்டர்ஜி ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்வார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.