

தேர்தல் காலங்களில் சம்பந் தப்பட்ட மாநிலம், மக்கள், ஜாதி, மதம் போன்ற எல்லா அம்சங் களையும் கணித்து அதற்கேற்ப வியூகம் வகுத்து கொடுத்து வருபவர் பிரசாந்த் கிஷோர். இவரது தேர்தல் வியூகங்களுக்கு பலன் கிடைத்துள்ளன. அதனால் கிஷோர் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் சமீபத்தில் உத்தரபிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடந்தது. அப்போது தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்க பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சி நிய மித்தது. அவர் வகுத்து கொடுத்த வியூகத்தின்படி காங்கிரஸும் தேர்தலில் செயல்பட்டது. ஆனால், உ.பி., உத்தராகண்ட் மாநிலங் களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. கோவா, மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக வந்தா லும், ஆட்சியைப் பிடிக்க முடிய வில்லை. சிறிய கட்சிகளின் ஆதர வுடன் அந்த 2 மாநிலங்களிலும் பாஜக.வே ஆட்சி அமைத்தது. பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோரைக் காணவில்லை. அவரை கண்டுபிடித்து கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று உத்தர பிரதேசத்தில் போஸ்டர் ஒட்டப்பட் டுள்ளது.
இதுகுறித்து உ.பி. காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ராஜேஷ் சிங் கூறும்போது, ‘‘அனைத்து காங் கிரஸ் தொண்டர்களின் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக அவர் (பிரசாந்த் கிஷோர்) சொன்னதை செய்தோம். ஏன் என்று ஒரு வார்த்தை மறுத்து பேசவில்லை. ஆனால், இப்போது எங்கள் கேள்விகளுக்குப் பதில் வேண்டும்’’ என்றார். எனினும், போஸ்டர்களை நீக்கும்படி மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் உத்தரவிட்டுள்ளார்.