

அகில இந்திய தொழிற்சங்கங் களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் கர்நாடகாவில் பெங்களூரு, கோலார், மைசூரு, உடுப்பி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முழுவதுமாக இயக்கப்படவில்லை.
தொழிலாளர்களின் வேண்டு கோளை ஏற்று கடைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், திரையரங்குகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. கர்நாடகா வில் உள்ள பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. முழு அடைப்பின் காரணமாக
பெங்களூருவில் உள்ள ஆயிரம் கார்மெண்ட்ஸ் நிறுவனங் களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் துமக்கூரு சாலையில் கண்டன பேரணி நடத்தினர். இதே போல போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் சார்பாக பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை பேரணி நடத்தப் பட்டது. இதே போல கோலார், மைசூரு, பெலகாவி உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேரணி நடத்தினர்.
பெங்களூருவில் ஒயிட் ஃபீல்ட், மாரத்தஹள்ளி உள்ளிட்ட இடங்களில் ஐடி நிறுவனங்களின் 50 கார்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெங்களூருவில் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி ஆகியவை முழுமையாக இயக்கப்படவில்லை என்றாலும், மெட்ரோ ரயில் மட்டும் இயங்கியது. இருப்பினும் பெங்களூரு உட்பட கர்நாடகாவில் பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.