

கேரளாவில் இருந்து மாயமான 6 பெண்கள் உட்பட 22 பேர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்திருப்பது உறுதியாகியுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்ளைச் சேர்ந்த 6 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 22 பேர் கடந்த ஜூன் மாதம் திடீரென காணாமல் போயினர். அந்த பெண்கள் தங்களது கணவர்களுடன் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்ல முயன்ற யாஸ்மின் முகமது ஜாஹித் (29) என்ற பெண்ணை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கேரளாவில் இருந்து மாயமான 22 பேரும் அபுதாபி, துபாய், குவைத் வழியாக ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஐஎஸ் ஆதரவாளரான ரஷீத், அவரது முதல் மனைவி ஆயிஷா இருவரும் இணைந்து தன்னை ஐஎஸ் அமைப்பில் இணையும்படி மூளைச்சலவை செய்ததாக விசாரணையில் யாஸ்மின் தெரிவித்துள்ளார். மேலும் தொலைபேசி மூலம் தன்னை திருமணம் செய்த கொண்ட ரஷீத், கேரளா இளைஞர்கள் தங்களது மனைவியுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் அமைப்பில் இணைந்த தகவலையும் கூறியதாக யாஸ்மின் தெரிவித்துள்ளார்.