

மதுரா கலவரத்தில் 27 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஆக்கிரமிப்பாளர்களை முன்கூட்டியே வெளியேற்றாமல் நீண்ட மாதங்கள் வரை அவர்கள் தங்குவதற்கு அனுமதி அளித்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஜவஹர் பாக் பூங்காவை ஆக்கிரமித்து கடந்த 2 ஆண்டுகளாக கூடாரமிட்டு தங்கியிருந்த ‘போஸ் சேனா’ அமைப்பினரை போலீஸார் கடந்த வாரம் வெளியேற்றினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் மாவட்ட எஸ்.பி உட்பட 27 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பிஹார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார்,
‘‘இந்த விவகாரம் மிகவும் கவலைக்குரியது. பல மாதங்கள் வரை ஆக்கிரமிப்பாளர்கள் அங்கு தங்குவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது ஆச்சரியமாக உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பாளர்களின் கோரிக்கையும் வினோதமாக உள்ளது. உத்தரப் பிரதேச அரசு ஆக்கிரமிப்பாளர்கள் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இத்தனை மாதம் வரை அவர்களை அங்கு தங்க அனுமதித்ததே பெரும் தவறு. இப்படியொரு சம்பவம் நடக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்’’ என்றார்.