

பாகிஸ்தானின் உளவு ஏஜென்ட் என தன்னைப் பற்றி பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார் பாது காப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி.
இதுபற்றி நிருபர்கள் சந்திப்பு கூட்டத்தில் சனிக் கிழமை அவர் கூறியதாவது:
மலிவான விளம்பரம் தேட கூறப்படும் இத்தகைய அநாகரிக கருத்துகளை தேசப்பற்று மிக்க எவரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பதே எனது நிலைப்பாடு. மோடியின் இத்தகைய கருத்து பாதுகாப்புப்படைகளின் மனோ திடத்தை குலைப்பதுடன் எதிரிகளுக்கே துணைபுரியும். தனிநபர் மீதான தாக்குதல் இது என நான் வருத்தப்படவில்லை.
பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்றதிலிருந்து நாட்டின் பாதுகாப்பு தயார் நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறுவதை நான் நிராகரிக்கிறேன். ராணுவத்தை நவீன மயமாக்குவதும் தளவாடங்களை கொள்முதல் செய்வதும் தொடர்கிறது.
படை விமான விபத்து
விமானப்படையின் சூப்பர் ஹெல்குலிஸ் விமானம் விழுந்து நொறுங்கியது பற்றி விசாரணை அறிக்கை வருவதற்கு முன்பே திட்டவட்ட முடிவுக்கு வந்து விடுவது சரியானது அல்ல. சோதித்தல், சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்குப் பிறகே விமானங்களை விமானப் படை தேர்வு செய் கிறது. இவற்றை கொள்முதல் செய்வதில் அரசியல் முடிவு ஏதும் இருப்பதில்லை.
விலை, தரம், நடைமுறை விதிகளுக்கு உட்பட்டே கொள்முதல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ராணுவ சம்பந்தப்பட்ட கொள்முதல்கள் தொடர்பாக ஊழல் புகார் எழுந்தால் அவற்றை விசாரிப்பதில் அரசு தயக்கம் காட்டுவதில்லை. புகார் எப்போது எழுந்தாலும் விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.
என்னதான் விமர்சிக்கப்பட்டாலும் சரி, நமது படைகள் எத்தகைய நிலை மைகளையும் எதிர்கொள்ளும் வலிமை கொண்டது என்றார் அந்தோனி.