

மகாராஷ்டிர மாநிலத்தில் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் வேனில் இருந்து ரூ.5 கோடியை துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் ஏந்திய கொள்ளை யர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோத ராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செக்மேட் பிரைவேட் சர்வீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் பல்வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணிகளை மேற் கொண்டு வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே டீன் ஹாத் நாகா என்ற இடத்தில் இந்நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல பல்வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்காக இந்த அலுவலகத்தில் உள்ள வேனில் ரூ.5 கோடி ஏற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில், துப்பாக்கி, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங் களுடன் அங்கு வந்த கொள்ளை யர்கள் சிலர் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனை யில் மிரட்டி ரூ.5 கோடியை கொள்ளையடித்தனர். மேலும், அந்த அலுவலகத்தில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ஐஏஎன்எஸ்