

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் ஜக்தால்பூர் பகுதியில் காவல்துறை ஐ.ஜி. விவேகானந்த் சின்கா, டி.ஐ.ஜி. சுந்தரராஜ், ஆட்சியர் அமித் கட்டாரியா ஆகியோர் முன்னிலையில் 21 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று சரணடைந்தனர்.
இவர்களில், தீவிரவாதக் குழுவின் தலைவனாகச் செயல் பட்ட லக்ஷ்மணன் மத்காமியின் தலைக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், கமாண்டர் பரசுராம் மண்டாலி, அர்ஜூன் காஸ்யப் ஆகியோர் தலா ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவர்கள். மங்கிலி மார்கம் என்கிற பெண் உட்பட சரணடைந்த அனைவருக்கும் தலா ரூ.10,000 ரொக்கம் வழங்கப்பட்டது. மாநில அரசின் சார்பில் அவர்களது மறுவாழ்வுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
சுக்மா, பிஜாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கூட்டுப்படையின் தேடுதல் வேட்டையில், 15 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், பஸ்தார் மாவட்டத்தில் 21 தீவிரவாதிகள் சரணடைந்திருப்பது தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.