

வீட்டில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் வரையிலான காட்சிகளை நேரலை செய்த மக்களவை ஆம் ஆத்மி எம்.பி. பக்வந்த் மான் செயலுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இருக்கும் நாடாளுமன்ற வளாகத்தை வீடியோ பிடித்தது தொடர்பாக பக்வந்த் மான் மன்னிப்பு கோரினாலும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதனை ஏற்கவில்லை.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி பக்வந்த் செயல் சரியானதே என்று வாதாடியுள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி தலைவர் அசுடோஷ் கூறும்போது, “நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பும் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்ற நடைமுறையை பக்வந்த் மான் மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளார். 20 பெயர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையை அவர் வெளிப்படுத்தினார். நாட்டின் அனைத்துத் தொகுதிகளிலிருந்தும் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கேள்விகள் கேட்க உரிமை இருக்கும் போது லக்கி டிரா அடிப்படையில் 20 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து கேள்வி எழுவதற்காகவே இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தை குலுக்கல் முறை தேர்வு அடிப்படையில் நடத்த முடியாது” என்றார்.
ஆனால் மற்றொரு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கூறும் போது, “வீடியோவின் பின்னணியில் எதுவும் இல்லை. ஆனால் இதனை தவிர்க்க வேண்டும். எதிர்காலத்தில் இனி எச்சரிக்கையாக இருக்குமாறு அவரை அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.
மேலும் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் இந்த வீடியோ எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை என்கிறது ஆம் ஆத்மி.