மோடியை எதிர்த்து போட்டியிடத் தயார்: கேஜ்ரிவால் அறிவிப்பு

மோடியை எதிர்த்து போட்டியிடத் தயார்: கேஜ்ரிவால் அறிவிப்பு
Updated on
1 min read

வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்த்துப் போட்டியிட தாம் தயாராக இருப்பதாக, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

பெங்களூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஆம் ஆத்மி பிரச்சாரப் பேரணியில் பேசிய கேஜ்ரிவால், "மார்ச் 23-ம் தேதி வாரணாசி செல்கிறேன். அங்கு பேரணியில் கலந்துகொள்கிறேன்.

வாரணாசி மக்களின் விருப்பம்தான் இறுதி முடிவு. வாரணாசி மக்கள் இந்தப் பொறுப்பை (மோடிக்கு எதிராக போட்டியிடுவது) வழங்கினால், அதை முழு மனதோடு ஏற்கத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

குஜராத் முதல்வரை எதிர்த்து தாம் போட்டிட்டு, அவரை வீழ்த்த வேண்டும் என்று தமது ஆம் ஆத்மி கட்சி விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இது தொடர்பான இறுதி முடிவை வாரணாசியில் மார்ச் 23-ம் தேதிதான் அறிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மக்களிடம் கருத்து கேட்ட பிறகு, மோடியை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

முன்னதாக, வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுவார் என்று பாஜக சனிக்கிழமை இரவு அறிவித்தது.

வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதில் தாம் பெருமிதம் கொள்வதாக நரேந்திர மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in