

காஷ்மீரில் இன்று (செவ்வாய்) போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் மீண்டும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் காயமடைடந்தனர்.
காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் கல்வீச்சுப் போராட்டம் நடைபெற்றது. அண்மையில் நடந்த போராட்டங்களில் பலர் கொல்லப்பட்டதைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இப்போராட்டத்தில் சிலர் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்கினர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “கல்வீசித் தாக்கிய போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து பரல் (பெல்லட்) குண்டுகளால் சுட்டனர். இதில், 17 பேர் பரல் குண்டுகளால் காயமடைந்தனர். அவர்களில் 13 பேர் முதலுதவி அளிக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நான்கு பேர் சிறப்பு சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
நவ்காம் பகுதி, குஷால்போரா, பந்திப்போரா ஆகிய பகுதிகளிலும் கல் வீச்சு தாக்குதல் போராட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
46-வது நாளாக நேற்றும் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் இதர பகுதிகளில் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
ராஜ்நாத் பயணம்
மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் செல்கிறார். ஜூலை 9-ம் தேதி முதல் தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் கடந்த 2 மாதங்களில் ராஜ்நாத் இரண்டாவது முறையாக காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார்.
தற்போது காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்வதுடன், குறிப்பிட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“காஷ்மீருடன் உணர்வுப்பூர்வமான உறவைப் பேண விரும்புகிறோம். காஷ்மீரில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்ப யாருக்கெல்லாம் விருப்பமோ அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும்” என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் வலியுறுத்தல்
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான காஷ்மீர் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்ததை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, “பிரதமர், ஜம்மு-காஷ்மீர் எதிர்க்கட்சிகள் சந்திப்பு, புதிய சிந்தனைக்கான தொடக்கம் எனில் அதனை நாம் நிச்சயம் வரவேற்க வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கையாக, ஜம்மு-காஷ்மீருக்கு அனைத்துக கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.