Published : 28 Feb 2014 12:00 AM
Last Updated : 28 Feb 2014 12:00 AM

நீர்மூழ்கி கப்பலில் மாயமான 2 அதிகாரிகள் சடலமாக மீட்பு

விபத்துக்குள்ளான இந்திய கடற்படை நீர்மூழ்கி போர் கப்பலில் மாயமான இரு அதிகாரிகளும் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர்.

கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சிந்துரத்னா கப்பலில் நேற்று முன்தினம் திடீரென பரவிய புகையால் அதில் இருந்த 7 வீரர்கள் மூச்சுத் திணறி பாதிக்கப்பட்டனர்.

கப்பலில் இருந்த லெப்டினென்ட் கமாண்டர் கபீஷ் முன்வால், லெப்டினென்ட் மனோரஞ்சன் குமார் ஆகியோர் காணாமல் போயினர்.

இந்நிலையில் நேற்று கப்பலில் தேடுதல் பணி நடைபெற்றது. அப்போது அங்குள்ள அறையில் அதிகாரிகள் இருவரும் சடலமாகக் கிடந்தனர்.

இது தொடர்பாக கடற்படை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், நீர் மூழ்கிக் கப்பலில் இருந்த இரு அதிகாரிகளை காணவில்லை என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இருவரது உடல்களும் கப்பலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டனர் என்று உடலை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மும்பை கடல் பகுதியில் நேற்று முன்தினம் காலை வழக்கமான பணியில் நீர்மூழ்கிக் கப்பல் ஈடுபட்டிருந்தபோது அதில் திடீரென புகை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக கப்பல் கரைக்கு கொண்டு வரப்பட்டது. அதில் இருந்த வீரர்களில் 7 பேர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். இப்போது இரு அதிகாரிகள் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ரியர் அட்மிரல் நிலையில் உள்ள அதிகாரி தலைமையிலான உயர்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 7 மாதங்களில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் விபத்துக்குள்ளாவது இது 10- வது முறை. இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்ற கடற்படை தலைமை தளபதி டி.கே.ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

பிரதமருடன் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனை

கடற்படை கப்பல்கள் விபத்துக்குள்ளாவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறியுள்ளார்.

பிரதமர் உள்பட அனைவரிடமும் ஆலோசித்த பின்புதான் கடற்படை தலைமை தளபதி டி.கே.ஜோஷியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜோஷி மிகச் சிறந்த அதிகாரி, நல்ல மனிதர்.

கடற்படையில் நிகழ்ந்த சம்பவங்களால் அவர் மிகவும் துயரமடைந்துள்ளார். ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர் என்னை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார் என்றும் அமைச்சர் அந்தோனி தெரிவித்துள்ளார்.

விபத்துக்கு பொறுப்பேற்கிறேன்: டி.கே.ஜோஷி

பதவி விலகியுள்ள கடற்படை தலைமை தளபதி தன்னுடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் எனது மனதுடனும், மனைவியுடன் ஆலோசித்த பின்புதான் பதவி விலகும் முடிவை எடுத்தேன். நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் நானே முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x