

ஆசியாவில் 30 வயதுக்குட்பட்ட சாதனையாளர்கள் பட்டியலை, போர்ப்ஸ் நாளிதழ் ’30 அண்டர் 30’ என்ற பெயரில் அண்மையில் வெளியிட்டது. இதில் இளம் தொழிலதிபர்கள், திரையுலகினர், விளையாட்டு வீரர்கள், என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 பேர் இடம்பிடித்துள்ளனர். அதில் இந்தியாவில் இருந்து மட்டும் 53 பேர் தேர்வாகியுள்ளனர். இதன் மூலம் சீனாவுக்கு அடுத்தபடியாக (76 பேர்) இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் விளையாட்டில், ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்ற தீபா கர்மாகர் இடம்பிடித்துள்ளார். ‘ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வெல்லாவிட்டாலும், முதல் முயற்சிலேயே 4-ம் இடம் பிடித்து சாதித்தார். தவிர வெண்கலப் பதக்கத்தையும் 0.15 புள்ளிகள் என்ற கணக்கில் மயிரிழையில் தவறவிட்டார்’ என போர்ப்ஸ் புகழாரம் சூட்டியுள்ளது.
இதேபோல் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்�ஷி மாலிக் பெயரும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் சிறிய நகரமான ரோதக்கை சேர்ந்த மாலிக் இந்த இடத்தை பிடிக்க பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தவர் என போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
சென்னை சகோதரர்கள்
5 ஆண்டுகளுக்கு முன் கோ டைமென் ஷன்ஸ் என்ற மொபைல் செயலியை தயாரித்த சென்னை சகோதரர்கள் சஞ் சய் (15), ஷரவண் குமரன் (17) ஆகி யோரது பெயர்களும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இன்றைய தேதி யில் இவர்கள் இருவரும் இணைந்து ஆப் ஸ்டோருக்காக 7 மொபைல் செயலியை யும், கூகுள் பிளேவுக்காக 3 செயலியையும் உருவாக்கியுள்ளனர். அதில் கோடொனேட் செயலி மீதமான உணவுகள், உடைகள் மற்றும் மரச் சாமான்களை தேவைப்படுபவர் களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப் பட்டது. இந்த செயலிகள் 60 நாடுகளில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் குறுகிய காலத்தில் கலைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்த பாலிவுட் நடிகை ஆலியா பட், அர்ஜூனா விருது பெற்ற இந்தியாவின் முதல் பாராலிம்பிக் நீச்சல் வீரர் சரத் கெய்க்வாட், வன்கொடுமைகளுக்கு எதிராக போராடுவதற்காக தன்னார்வ நிறுவனம் தொடங்கி, பெண்களுக்கு கல்வி, சட்ட ஆலோசனை, மருத்துவம் ஆகியவற்றை வழங்கி வரும் திரிஷா ஷெட்டி, இந்தியாவுக்கு உணவளிப்போம் (பீடிங் இந்தியா) என்ற பெயரில் அன்னதானம் செய்து பசிப் பிணி போக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அன்கித் கவாத்ரா, உள்பட 53 பேர் இடம்பிடித்துள்ளனர்.