Last Updated : 16 Sep, 2016 05:23 PM

 

Published : 16 Sep 2016 05:23 PM
Last Updated : 16 Sep 2016 05:23 PM

வீட்டுப் பயன்பாட்டுக்கான காவிரி நீரில் 50%-ஐ வீணாக்கும் பெங்களூரு

காவிரி நீரைத் தனதாக்கிக்கொள்ளத் தொடர்ந்து போராடும் கர்நாடகத்தின் மத்தியில், அதன் தலைநகரான பெங்களூரு, வீட்டுப் பயன்பாட்டுக்கு கிடைக்கும் நீரில் 50 சதவீதத்தை வீணாக்கி வருவதாகச் சொல்கிறது இந்தியா ஸ்பெண்ட் எனும் தகவல் நிறுவனம்.

இந்தியா ஸ்பெண்ட் நிறுவன ஆய்வின் மூலம் பின்வரும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன்படி, தண்ணீரை அதிகம் வீணாக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதலில் கொல்கத்தா உள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூரு உள்ளது.

85 லட்சம் மக்களோடு, இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் பெங்களூரு. இங்கு சராசரியாக வாரத்துக்கு மூன்று முறை தண்ணீர் வழங்கப்படுகிறது.

தற்போது பெங்களூரு நகரம் ஒரு நாளைக்கு 1,350 மில்லியன் லிட்டர்கள் தண்ணீரைப் பெற்றுவருகிறது. அதன் மக்கள் தொகை 8.5 மில்லியன் (சென்சஸ் 2011) என்னும்போது ஒவ்வொருவரும் 158.82 லிட்டர் நீரைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.

அடுத்த ஒன்பது ஆண்டுகளில் பெங்களூரின் நீர்த்தேவை, இப்போது வழங்கப்படும் நீரைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். கர்நாடகத்தின் சராசரி மக்கள் தொகையைவிட, பெங்களூரின் மக்கள் தொகை 13 மடங்கு அதிகமாக இருக்கிறது.

கர்நாடகாவின் வீட்டு உபயோகத்துக்காக சேமிக்கப்படும் காவிரி நீரின் 50 சதவீதம் பெங்களூருக்குச் செல்கிறது. இதில் பெரும்பான்மையான அளவு (49%), குடிநீர் விநியோகத்தின்போது வீணாகிறது என்கிறது பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம்.

பெங்களூரின் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறான அளவில் தண்ணீர் வழங்கப்படுகிறது. சராசரியாக ஒருவருக்கு மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் தொடங்கி, மூன்று பங்கு அதிக நீர் வரை மாறுபட்டுத் தரப்படுகிறது.

தண்ணீரை வீணாக்கும் மெட்ரோ நகரங்களில் பெங்களூரு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா 50% நீரை வீணாக்கி முதலிடத்தில் இருக்கிறது. மும்பை 18% நீரையும், புதுடெல்லி 26% நீரையும், சென்னை 20% நீரையும் வீணாக்குகின்றன. பெங்களூரு 48% நீரை வீணாக்குகிறது.

பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய முன்னாள் தலைவர் விஜயபாஸ்கர், பிப்ரவரி 2016-ம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு வழங்கப்படும் 1,400 மில்லியன் லிட்டர் தண்ணீரில், 600 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணாகிறது என்று கூறியுள்ளார்.

தண்ணீர் விநியோக இழப்பு

பொதுவாக இரண்டு வகையில் தண்ணீர் விநியோக இழப்புகள் ஏற்படுகின்றன.

முதலாவதாக நீர் விநியோகத்தின் போது ஏற்படும் சேதமும், கசிவுகளும்.

இரண்டாவதாக முறைகேடான நீர் இணைப்புகள்.

நீர் விநியோகிக்கும் இடங்களில் இருந்தும், குழாய்களில் இருந்தும் சுமார் 88.5 சதவீத நீர் வீணாகிறது. மற்ற இழப்புகள் முக்கியக் குழாய்களில் இருந்து சிறியளவில் வீணாகும் நீரின் அளவாகும்.

காவிரி நதிநீர் ஆணையம் கர்நாடகாவுக்கு வழங்கியுள்ள 270 ஆயிரம் மில்லியன் கன அடி நீரில், சுமார் 80 சதவீதம் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படுகிறது. மீதியுள்ள 20 % நீர், கர்நாடக நகர மற்றும் கிராமங்களின் வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில்தான் பெங்களூரின் பங்கு அதிகமாக இருக்கிறது.

தற்போது பெங்களூரு நகரம் 19 ஆயிரம் மில்லியன் கன அடி காவிரிநீரைப் பெற்றுவருகிறது. கர்நாடக மாநில நகர வளர்ச்சித்துறை, மெட்ரோபாலிடன் பகுதிகளின் தண்ணீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பெங்களூருக்குக் கூடுதலாக 10 ஆயிரம் மில்லியன் கன அடி காவிரிநீரைத் தருகிறது. அத்தோடு, காவிரிஆற்றிலிருந்து 30 ஆயிரம் மில்லியன் கன அடி காவிரிநீரைக் கூடுதலாகக் கேட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரத்துக்குத் தண்ணீர் அளிப்பதற்காக சுமார் 100 கி.மீ. தொலைவில் இருந்து, 540 மீ உயரத்துக்கு குழாய்கள் அமைத்து பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம், தன்னுடைய பட்ஜெட்டில் 60% நிதியை இதற்கு ஒதுக்குகிறது. நிலத்தடி நீர் மொத்தமும் மாசுபட்டிருக்கிறது. காவிரியின் கிளை நதியான அர்காவதியின் 120 வருடப் பழமையான ஹெசராகட்டா மற்றும் 83 வயதான திப்பகொண்டனஹல்லி நீர்த்தேக்கங்களை நம்பமுடியவில்லை. ஆக பெங்களூரு, கிட்டத்தட்ட முழுமையாக காவிரி நதியை மட்டுமே நம்பியிருக்கிறது.

எப்பொழுதெல்லாம் விநியோகத்தின் அளவைவிட, நீரின் தேவை அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் நகர நீர் வழங்கல் துறை, தண்ணீர் விநியோகத் திட்டங்களையே மாற்றும். தேவையின் அளவைக் குறைப்பதற்கு குறைந்த முக்கியத்துவமே அளிக்கப்படும்.

நீர் விநியோகத்தின் இத்தகைய தேவையை ஒட்டிய செயல்பாடுகளும் கொள்கைகளும் அந்த அமைப்பையே குலைத்து, தோல்வியடைய வைக்கும்.

இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தமிழில்: ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x