

கர்நாடகாவில் நடந்த மாநிலங் களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 8 மஜத அதிருப்தி எம்எல்ஏக்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் காலியாகும் 4 மாநிலங்களவை உறுப்பினர் களை தேர்வு செய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை நடந்தது. சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸுக்கு 124, பாஜகவுக்கு 44, மஜதவுக்கு 40, மற்றவைக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற குறைந்தபட்சம் 45 வாக்குகள் அளிக்கப்பட வேண்டும்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் 2 பேரையும், பாஜக, மஜத ஆகியவை தலா ஒருவரையும் தேர்வு செய்ய முடியும். மஜதவுக் குள் அதிருப்தி நிலவியதால் காங்கிரஸும், பாஜகவும் கூடுத லாக ஒரு வேட்பாளரை களமிறக் கின. மேலும் வாக்குகளை கவர மஜத அதிருப்தி எம்எல்ஏக்களிடம் இரு கட்சிகளும் குதிரை பேரம் நடத்தின. இது தொடர்பான வீடியோவும் அண்மையில் வெளியானது.
இந்நிலையில் சனிக்கிழமை நடந்த தேர்தலில் மஜத கட்சி கொறடாவின் உத்தரவையும் மீறி, அதிருப்தி எம்எல்ஏக்கள் 8 பேரும் காங்கிரஸின் 3-வது வேட் பாளரான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.சி.ராமமூர்த்திக்கு வாக்களித்தனர். இதனால் மஜத வேட்பாளர் பி.எம்.பரூக் தோல்வியை தழுவினார்.
இதையடுத்து பெங்களூருவில் நேற்று அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டிய மஜத தலை வரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவகவுடா இந்த விவகாரம் குறித்து விவாதித்தார். பின்னர் 8 அதிருப்தி எம்எல்ஏக் களையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார்.
முன்னதாக இது குறித்து பேசிய தேவகவுடா, ‘‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் நாடு முழுவதும் பேசுகின்றனர். ஆனால் கர்நாடகாவில் என்ன செய்தார்கள்? காங்கிரஸுடன் கைகோர்த்துவிட்டார்கள்’’ என்றார்.
திரைப்பட படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்ததால் இந்தக் கூட்டத்தில் மஜத மாநில தலைவர் ஹெச்.டி.குமாரசாமி பங்கேற்கவில்லை.
சட்டப்பேரவையில் மஜதவுக்கு 40 எம்எல்ஏக்களின் பலம் இருந் தாலும் அக்கட்சியின் வேட்பாளர் பரூக்குக்கு வெறும் 33 வாக்குகளே கிடைத்தன. காங்கிரஸின் முதல் இரு வேட்பாளர்களான ஆஸ்கர் ஃபெர்னாண்டஸும், ஜெய்ராம் ரமேஷும், தலா 46 மற்றும் 47 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர். மஜத மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் அளித்த வாக்குகளால் காங்கிரஸின் 3-வது வேட்பாளரான ராமமூர்த்தி மொத்தம் 52 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.