ஜிஎஸ்டி மசோதா போல மாநிலங்களின் பிற உரிமைகளைப் பறித்தால் ஆபத்தான இந்தியாவாக மாறும்: மாநிலங்களவையில் டிகேஎஸ் இளங்கோவன் எச்சரிக்கை

ஜிஎஸ்டி மசோதா போல மாநிலங்களின் பிற உரிமைகளைப் பறித்தால் ஆபத்தான இந்தியாவாக மாறும்: மாநிலங்களவையில் டிகேஎஸ் இளங்கோவன் எச்சரிக்கை
Updated on
3 min read

ஜிஎஸ்டி மசோதா போல பிரதமர் தன்னுடைய புதிய இந்தியா திட்டத்தை இதே பாணியில் கொண்டு செல்ல முடிவு செய்தால், அது ஆபத்தான இந்தியாவாக மாறும் என்று டிகேஎஸ் இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

ஜிஎஸ்டி மசோதாவின் மீது மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:

''நான் இந்த அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தமிழகம் எனும் மாநிலத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நேற்று வரை நான் தமிழகம் எனும் மாநிலத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவனாகவே பணியாற்றி வந்தேன். இன்று நான் இந்தச் சட்டம் குறித்துப் பேசுகையில், 'தமிழ்நாடு எனும் மாநகராட்சியின் சார்பில்' பேசுவதாக உணர்கிறேன்.

காரணம் ஒரு மாநிலத்தின் மிகப் பெரும் உரிமையான விற்பனை வரி விதிக்கும் உரிமையை மத்திய அரசு பறித்துக் கொண்டதன் மூலம், மாநிலங்களை மாநகராட்சிகளாகத் தரம் குறைத்துள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு தேவை என மத்திய அரசு கூறுகிறது. ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறை யாருக்காக? இந்திய மக்களுக்காகவா? இல்லை. இது இந்திய மக்களுக்கு உதவுவதற்காக இல்லை. இது இந்தியாவுக்கு வெளியே உள்ள மக்களுக்காக, இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்காகவும், இந்தியாவில் வணிகம் மேற்கொள்ளும் மற்ற நாட்டுக்காரர்களுக்காகவும் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

உறுப்பினர் பூபேந்திர யாதவ் பேசும்போது, புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் உறுதி மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், பிரதமர் தெரிவித்தபோது, புதிய இந்தியா என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தியாவை உருவாக்கும் எண்ணத்தோடு இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பார் என்று நான் எண்ணவில்லை.

இந்தியா ஒருபோதும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான நாடாக இருக்கக் கூடாது. இந்தியர்கள் தங்களுடைய பல்வேறு மொழிகள், பண்பாடுகள், மதங்கள் ஆகியவை குறித்து பெருமைப்படுபவர்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டைப் போற்றுவதில் பெருமிதம் கொள்பவர்கள். சுதந்திரமடைந்து எழுபது ஆண்டு காலமாக இந்த ஒற்றுமையைப் போற்றிப் பாதுகாப்பதில் தனித்துவம் பெற்றவர்கள்.

இப்போது, இந்த நிலையில் மாநிலங்களிலிருந்து ஒரு மாபெரும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் விற்பனை வரி விதிக்கும் உரிமை. இந்தியாவின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் வேறு பலவும் உள்ளன. அவற்றையும் பறித்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அதன் விளைவுகள் ஆபத்தானதாகிவிடும்.

இந்தியா என்பது அரசியல் சாசனப்படி மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். ஆனால், தற்போது மாநிலங்களின் வரிவிதிப்பு உரிமை பறிக்கப்பட்டதைப் போல, மொழி உரிமையும், பண்பாட்டு உரிமையும், மத உரிமையும் பறிக்கப்படுமானால், இந்தியா என்னவாகும்? அதுபோன்ற இந்தியாவை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. இதனை இந்த அவை புரிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமைதான் இந்தியாவை உலக அரங்கில் ஒரு தனித்துவமிக்க நாடாக நிலைப்படுத்தி யிருக்கிறது. உலகமே நாம் வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ்வது கண்டு நம்மைப் பெருமையோடு பார்க்கிறது. நம்முடைய பன்முகக் கலாச்சாரத்தைப் பாராட்டுகிறது. பல்வேறு மதக் குழுக்களும் ஒருங்கிணைந்து ஒருவரையொருவர் மதித்து வாழும் பாங்கினை உலகம் போற்றுகிறது. நாம் பேசும் பல மொழிகளின் வளத்தினைப் பாராட்டுகிறது. உலகிலேயே இரண்டு மொழிகளை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாறு படைத்த செம்மொழிகளாகக் கொண்ட நாடாக இந்தியா மட்டுமே விளங்குகிறது.

இப்போது இந்த ஆட்சியில் முதல்கட்டமாக மாநிலங்கள் வரிவிதிக்கும் உரிமையை இழந்திருக்கின்றன. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. பிரதமர் தன்னுடைய புதிய இந்தியா திட்டத்தை இதே பாணியில் கொண்டு செல்ல முடிவு செய்தால், அது ஆபத்தான இந்தியாவாக மாறும் என்று இந்த அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.

இந்தச் சட்டம் குறித்து நான் இப்பொழுது பேச விழைகிறேன். இரண்டு நாட்களுக்கு முன், நிதியமைச்சர் பேசும்போது, இந்த சட்டத்தால் பணவீக்கம் அதிகரிக்காது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், முந்தைய நிலைகளைக் காணும்போது, இத்தகைய வரிவிதிப்பு முறையை ஏற்றுக் கொண்ட பல நாடுகள் பணவீக்கத்தை எதிர்கொண்டிருக்கின்றன எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சிங்கப்பூர் பணவீக்கத்தை எதிர் கொண்டிருக்கிறது எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஒரு மாநகரம் போன்ற அளவில் உள்ள சிங்கப்பூரில் பணவீக்கம் அதிகரித்திருக்கும்போது, மிகப் பெரிய நாடான இந்தியாவில் பாதிப்பு இருக்காது என்று கூறுவது பொருத்தமானதாக இல்லை. மக்கள் கட்டாயம் பணவீக்க பாதிப்புகளைச் சந்தித்தே ஆக வேண்டும்.

நாங்கள் இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு காரணங்கள் இருக்கிறது. மாநிலத்தின் உரிமையை மத்திய அரசு பறிக்கும்போது, நாங்கள் அதனை எதிர்க்காமல் இருக்க முடியாது. அந்த வகையில் எனது எதிர்ப்பினைப் பதிவு செய்ய நான் விரும்புகிறேன்.

அதேநேரத்தில், ஜனநாயகத்தில் பெரும்பான்மைக்கு எதிராக சிறுபான்மை எவ்வளவு நியாயமான வாதங்களை முன்வைத்தாலும், பெரும்பான்மையின் முடிவுதான் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால், வேறுவழியின்றிச் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

முதலில், சில பொருட்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்த அரசைக் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீருக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். இன்றைக்கு பணக்காரர்கள் மட்டுமன்றி, சாதாரண மக்களும் 20 லிட்டர் குப்பிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தக் குடிநீருக்கு வரி விதித்தால், அது சாதாரண மக்களைப் பாதிக்கும். எனவே, அதற்கு வரி விதிப்பிலிருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதுபோலவே, வீடு கட்டுவதற்குப் பயன்படும் செங்கற்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு இத்துறைகள் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, வரிவிதிப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும்.

இன்னொரு முக்கியமான கருத்தை நான் ஏற்கனவே இந்த அவையில் பேசிய ஒன்றை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். தொழிலாளர் நலன் கருதி, குறிப்பாக சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக விதிக்கப்படும் வரியை, இந்த அரசு ஏற்கனவே திரும்பப் பெற்றுள்ளது. இந்த வரி தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்துக்கு ஆளானாலோ அல்லது பணியிடத்தில் மரணம் அடைய நேர்ந்தாலோ, அவர்களுக்கு உதவிடும் வகையில், ஒரு நிதியத்தை ஏற்படுத்துவதற்கான வரியாகும். இதனை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானதாகும். எனவே, இதுகுறித்து தொழிற் சங்கங்களை அழைத்துப் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நூலக வரி விதிக்கப்படுகிறது. இந்த நிதியத்தில் இருந்து தமிழக அரசு பல நூல்களை வாங்கி, நூலகங்களுக்கு வழங்கி வருகிறது. இதுபோன்ற சில கூடுதல் வரிகள் சிறப்பு நோக்கங்களுக்காக, மாநில அரசுகளால் விதிக்கப்படுகின்றன. எனவே, சிறப்பு நோக்கங்களுக்காக மாநில அரசுகளில் விதிக்கப்படும் வரிகள் குறித்து மாநில அரசுகளிடம் பேசி முடிவெடுக்க வேண்டும்.இந்த ஆலோசனைகளோடு, 'தமிழ்நாடு மாநகராட்சியின் சார்பில்' என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்'' என்று டிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in