

ஆதார் அட்டை திட்ட இயக்குநரும், இன்போசிஸ் முன்னாள் இணைச் செயல் அதிகாரியுமான நந்தன் நிலகேனி, வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெங்களூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று கூறப்படுகிறது.
2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்க ளவைத் தேர்தலில் புதிய வேட்பாளர்களை களமிறக்க அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. பெங்களூரில் இருக்கும் 4 தொகுதிகளையும் கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதில், பெங்களூர் தெற்குத் தொகுதியில் நந்தன் நிலகேனியை போட்டியிட வைக்க அந்தக் கட்சி முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு அவரும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
1996-ம் ஆண்டிலிருந்து பெங்களூர் தெற்குத் தொகுதியில் பாஜக பொதுச் செயலாளர் அனந்த குமார் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறார். இந்த முறை அவரை தோற்கடிக்க, நந்தன் நிலகேனியை வேட்பாளராக நிறுத்துவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
இந்த தொகுதியில் கல்வி யறிவு பெற்றவர்களும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களும் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இந்த துறையினரிடையே நந்தன் நிலகேனிக்கு நற்பெயர் உள்ளது. எனவே, அவர் வெற்றி பெறுவது உறுதி என காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக நிலகேனி உள்ளார். எனவே, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தர ராகுல் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் சோனியா காந்தியிடமும் நன்மதிப்பைப் பெற்று இருப்பதால் பெங்களூர் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தனக்கு நிச்சயம் கிடைக்கும் என நந்தன் நிலகேனி நம்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி ஏற்கெனவே பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை. பொது வாழ்வில் ஈடுபட ஆர்வம் இருக்கிறது” என்று அவர் கூறியிருத்தார்.