இயல்பு நிலைக்கு திரும்புகிறது ஹுத்ஹுத் உலுக்கிய விசாகப்பட்டினம்

இயல்பு நிலைக்கு திரும்புகிறது ஹுத்ஹுத் உலுக்கிய விசாகப்பட்டினம்
Updated on
1 min read

ஹுத்ஹுத் புயலின் சீற்றத்துக்குப் பின்னர் துறைமுக நகரான விசாகப்பட்டினம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இன்று (புதன்கிழமை) காலை பொதுப் போக்குவரத்து சேவை தொடங்கியது. மூன்று நாட்களுக்குப் பிறகு சாலைகளில் இன்று காலைதான் கணிசமான அளவு மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஹுத்ஹுத் புயல் கோரத் தாண்டவம் காரணமாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் புயலால் தூக்கி வீசப்பட்ட மின் கம்பங்களும், சேதமடைந்த மின்மாற்றிகளும் தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன.

சீரமைப்புப் பணிகளை, விசாகப்பட்டினத்தில் முகாமிட்டு மேற்பார்வையிட்டு வரும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பண்டங்களான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் ஆகியன கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில பகுதிகளில் வணிகர்கள் சிலர் அத்தியாவசியப் பண்டங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து ஆந்திர முதல்வர் 'காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படும்' என உறுதியளித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் பிரதான சாலைகளில் முறிந்து விழுந்த கிடந்த மரங்கள் அகற்றப்பட்டதால் ஆந்திராவின் பிற பகுதிகளில் இருந்தும் விசாகப்பட்டினத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பால், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களும் நகருக்கு வரத்துவங்கியுள்ளன. இதனால் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

விஜயவாடா - விசாகப்பட்டினம் மார்க்கத்தில் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டதையடுத்து அந்த மார்க்கத்தில் ரயில்கள் செவ்வாய்கிழமை முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்தில் கரை கடந்த ஹுத்ஹுத் புயல் மணிக்கு 180 கி.மீ வேக காற்றுடன் பலத்த மழையையும் ஏற்படுத்தியது. இதனால், விசாகப்பட்டினம் சூறையாடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in