Published : 13 Nov 2013 19:06 pm

Updated : 06 Jun 2017 14:34 pm

 

Published : 13 Nov 2013 07:06 PM
Last Updated : 06 Jun 2017 02:34 PM

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது சரியே: குர்ஷித்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்பது என இந்தியா எடுத்த முடிவு சரியானதுதான் என்றார் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்.

தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக புதன் கிழமை கொழும்பு வந்தடைந்தார் குர்ஷித்.

விமானத்தில் வரும்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் குர்ஷித் கூறியதாவது: நாட்டு நலனைக் கருத்தில் கொண்டே காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது என முடிவு எடுக்கப்பட்டது. இலங்கைத் தமிழர்கள் நலனில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர் விவகாரம், மீனவர் மீதான தாக்குதல்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் பற்றி இலங்கையுடன் பேச்சு நடத்த வேண்டியுள்ளது.இந்த மாநாட்டில் பங்கேற்பது, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலையை எந்த விதத்திலும் பலவீனப்படுத்தாது.


எனது பயணத்தின் நோக்கம் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தான். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்காக அல்ல. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தும் விவகாரம் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் அரசியல் அதிகாரம் தரக் கோருவது போன்றவை பற்றி இலங்கை அரசிடம் தமது கருத்துகளை சொல்ல இந்த மாநாட்டில் பங்கேற்பது நமக்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தரும். மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என எழும் கோரிக்கையால் குழப்பம் தான் ஏற்படுகிறது. இலங்கை வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் நலனுக்காக பல திட்டங்கள் அமல்படுத்தப் படுகின்றன. போர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 15 ஆயிரம் வீடுகள் கட்டித்தரு வது, சாலைகள் அமைப்பது, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற பல திட்டங்களில் இந்தியா தன்னை இணைத்துக்கொண்டு உதவி வருகிறது. இலங்கைக்கு நாம் வராவிட்டால் எப்படி இவற்றை செய்ய முடியும் என்றார் குர்ஷித். கொழும்பு வந்துள்ளதை கண்டித்து விமர்சிப்பவர்களுக்கு என்ன பதில் என கேட்டதற்கு, வெளியுறவுக் கொள்கை யைத்தான் நான் பரிசீலித்தேன், அதனுடன் சார்ந்த அரசியலை நான் பார்க்கவில்லை என்றார்.

யாழ்ப்பாணத்துக்கு வரும்படி வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்த நிலையில் அதை ஏற்கமுடியாமல் பிரதமர் இருப்பது பற்றி நிருபர் ஒருவர் கேட்டதற்கு, இதே போன்ற அழைப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வந்து அதை நிராகரிக்கும்போது எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார் குர்ஷித்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் என்னை செவ்வாய்க்கிழமை சந்தித்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இலங்கை அரசிடம் பேசுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். இலங்கைக்கு நான் போகாமல் எப்படி இது பற்றி பேச முடியும். இலங்கைக்குச் செல்லக்கூடாது, அதனுடன் உறவு கூடாது என்பது போன்ற நிபந்தனைகள் விதிப்பதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை

நடந்த கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு புதிதாக ஆரம்பிப்பதே இப்போதைய செயல்பாடாக இருக்க வேண்டும். இலங்கைவாழ் தமிழர்கள் நலனுக்காக பெருமளவில் இந்தியா முதலீடு செய்துள்ளது. வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்துள்ளது. அந்த ஆட்சி அரசியல், பொருளாதார ரீதியில் வெற்றி அடைய உதவுவது இந்தியாவின் கடமையாகும்.

இந்தியா-இலங்கை உடன்பாடு, இலங்கை அரசமைப்புச் சட்டத்தின்படி தமிழர் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் பெற்றுத் தரும் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. இதைச் செய்ய நாம் இலங்கை சென்றால்தான் முடியும் என்றார் குர்ஷித். இலங்கையில் சீன முதலீடு அதிகரித்து வருவது பற்றி கேட்டதற்கு, பிற நாடுகளுடன் இணைந்து செயல்பட அவர்களுக்கு உரிமை உள்ளது. இதுபற்றி கவலை கொள்ளவேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்றும் குர்ஷித் தெரிவித்தார்.

விமானப்படை சிறப்பு விமானத்தில் பண்டாரநாயக சர்வதேச விமானநிலை யத்துக்கு குர்ஷித், வெளியுறவுச்செயலர் சுஜாதா சிங், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் வந்தடைந்தனர்.

குர்ஷித்தை இலங்கை விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் குணரத்ன வரவேற்று அழைத்துச் சென்றார். புதன்கிழமையும் வியாழக் கிழமையும் நடைபெறும் காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் குர்ஷித், வெள்ளிக்கிழமை தொடங்கும் உச்சி மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதில்லை என முடிவு எடுத்தார். இந்நிலையில் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு வேதனை தெரிவித்த தமிழக சட்டப்பேரவையின் அவசர கூட்டம் இந்த மாநாட்டை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை செவ்வாய்க் கிழமை நிறைவேற்றியது.

முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற தீர்மானம் அக்டோபர் 24ம் தேதியும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


சல்மான் குர்ஷித்வெளியுறவு அமைச்சர்காமன்வெல்த் மாநாடுகுர்ஷித் பேட்டிஇலங்கை காமன்வெல்த் மாநாடுகொழும்பு பயணம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x