

கார்கில் வீரரின் மகள் குர்மேகர் கவுரை பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் மைசூரு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா ஒப்பிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கார்கில் போரில் உயிர்நீத்த கேப்டன் மன்தீப் சிங்கின் மகள் குர்மேகர் கவுர். பல்கலைக்கழகத் தில் நடந்த வன்முறை தொடர்பாக ஏபிவிபிக்கு எதிராக குர்மேகர் கவுர் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இவருக்கு இந்துத் துவா அமைப்பினர் பலாத்கார மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து குர்மேகர் கவுர், “உங்களின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன். நான் தனி நபர் அல்ல; எனக்குப் பின் ஒட்டுமொத்த இந்திய மாணவர் சமூகமும் இருக்கிறது” என்ற வாசகம் அடங்கிய பதா கையை ஏந்தியவாறு நிற்கும் தனது புகைப்படத்தை சமூக இணைய தளத்தில் பகிர்ந்தார். டெல்லி மாணவிக்கு மிரட்டல் விடுத்தவர் களுக்கு அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த மைசூரு எம்பி பிரதாப் சிம்ஹா நேற்று தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில், குர்மேகர் கவுரை பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் ஒப்பிட்டுப் பதிவிட்டார். இதற்கு பல்வேறு மாணவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பிரதாப் சிம்ஹா கூறும் போது, “கடந்த 1993-ல் தாவூத் இப்ராஹிம், 'நான் மக்களைக் கொல்லவில்லை. வெடிகுண்டுகள் தான் மக்களை கொன்றன” என்றார். தாவூத் இப்ராஹிம் ஒருபோதும் தன்னுடைய தேசவிரோத செயல் களுக்காக தனது தந்தையின் பெயரை பயன்படுத்தியது இல்லை. ஆனால் குர்மேகர் கவுர் தனது தந்தையின் பெயரை தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்துகிறார்.
மேலும் குர்மேகர் கவுர், “பாகிஸ்தான் எனது தந்தையை கொல்ல வில்லை. போர் தான் கொன்றது' என்கிறார். உண்மையிலேயே தேசத் துரோகிகள் அவரை மூளைச்சலவை செய்துவிட்டனர். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அவரை மீட்க வேண்டும்” என விளக்கம் அளித்துள்ளார். இதே குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு-வும் குர்மேகர் கவுர் மீது முன் வைத்திருப்பது சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.