

டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவு எடுக்க10 நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க் அழைப்பை ஏற்ற ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (சனிக்கிழமை) காலை அவரை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்: டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவு எடுக்க துணை நிலை ஆளுநரிடம் 10 நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
ஆட்சி அமைப்பது தொடர்பாக பொது மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்த 10 நாட்கள் கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது, அப்படி இருக்கும் போது ஆம் ஆத்மி கட்சி எப்படி அக்கட்சிகளிடம் ஆட்சிக்காக ஆதரவு கோரும் என்றார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் குறித்து காங்கிரஸ், பாஜ- கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆத் ஆத்மி நிராகரிப்பு...
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதற்கு காங்கிரஸ் முன்வந்தது.
ஆம் ஆத்மிக்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்த உடனே, அதை ஆத்மி கட்சி நிராகப்பதாக தெரிவித்தது.
இது குறித்து ஆத் ஆத்மி கட்சியின் முத்த தலைவர் பிரஷாந்த் பூஷன் கூறும்போது, "நாங்கள் காங்கிரஸ் ஆதரவை ஏற்பதாக இல்லை" என்றார்.
டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். இப்போது நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 32 இடங்களும், ஆம் ஆத்மிகட்சிக்கு 28 இடங்களும், காங்கிரஸுக்கு 8 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சைக்கு தலா ஓர் இடமும் கிடைத்தன.
முன்னதாக, டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை தங்களிடம் இல்லாததால், ஆட்சி அமைக்க இயலாது என்று துணை நிலை ஆளுநரிடம் பாஜக கூறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.