

ஹரியாணாவில் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு ஆதரவாக, பிஹார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஆகியோர் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, ‘தி இந்து’விடம் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி கூறும்போது, “வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் நிதிஷ் குமார் ஹரியாணாவில் சவுதாலா கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இவருடன் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவே கவுடாவும் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். இவர்கள், பாஜகவின் இரட்டை வேடம் மற்றும் ரகசிய திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறுவார்கள். இது உடைந்துபோன ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களை ஒன்று சேர்ப்பதற்கான ஒரு முயற்சி ஆகும்” என்றார்.
நிதிஷுடன், ஐக்கிய ஜனதா தள பொதுச் செயலாளர் சரத் யாதவும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இவர்களது கட்சி ஹரியாணாவில் சவுதாலாவிற்கு ஆதரவு தெரிவித்து தங்கள் வேட்பாளர்களின் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் இவர்களது கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.